கொடைக்கானல் ஏரிச்சாலையில் பட்டப்பகலில் வடமாநில பெண்ணிடம் செல்போன், பணம் பறிப்பு 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளுடன் கைது
கொடைக்கானல் ஏரிச்சாலையில் பட்டப்பகலில் வடமாநில பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த 2 வாலிபர்கள் மோட்டார்சைக்கிளுடன் கைது செய்யப்பட்டனர்.
கொடைக்கானல்:
மும்பையில் உள்ள அந்தேரி கிழக்கு பகுதியை சேர்ந்தவர் காசிநாத். இவரது மனைவி சுவாதி (வயது 29). கொைடக்கானலுக்கு சுற்றுலா வந்த இவர் நேற்று முன்தினம் பகலில் நட்சத்திர ஏரிச்சாலையில் வாடகை சைக்கிளில் உலா வந்தார். அப்போது நகராட்சி அலுவலகம் எதிரே மோட்டார்சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சைக்கிளின் முன்புறம் உள்ள கூடையில் வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு சீனிவாசன் ஆலோசனையின் பேரில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம்சந்த், குற்றப்பிரிவு போலீசார் சரவணன், ராமராஜன், காசிநாத் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் மோட்டார்சைக்கிளில் வந்தவர்களின் அடையாளம் தெரிந்தது.
இதையடுத்து மலைப்பாதையில் இருந்து கீழே இறங்கும் சோதனைச்சாவடிகள் அனைத்தும் உஷார் செய்யப்பட்டது. அப்போது பெரியகுளம் செல்லும் சாலையில் அமைக்கப்பட்டிருந்த சோதனைச்சாவடியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்கள் சுவாதியின் கைப்பையை திருடியதும், அவர்கள் கொடைக்கானல் அருகே உள்ள செண்பகனூர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (21), கோபாலகிருஷ்ணன் (21) என்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் கைப்பையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை கைப்பற்றப்பட்டு சுவாதியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. கைப்பை பறிக்கப்பட்ட 4 மணி நேரத்தில் போலீசாரின் துரித நடவடிக்கையால் அது மீண்டு்ம் கிடைத்தது குறித்து சுவாதி மகிழ்ச்சி அடைந்தார். மேலும் அவர் போலீசாருக்கு நன்றி தெரிவித்து கொண்டார்.
Related Tags :
Next Story