முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி
மூங்கில்துறைப்பட்டு பகுதியில் பெய்த கனமழையால் முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரையோர குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர்
மூங்கில்துறைப்பட்டு
பரவலாக மழை
வெப்பசலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் மழை பெய்தது.
குறிப்பாக மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் நீர் நிலைகளுக்கு தண்ணீர் வர தொடங்கியுள்ளது.
ஆற்றில் வெள்ளப்பெருக்கு
மேலும் கல்வராயன்மலை அடிவாரப் பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்து வருவதால் முஸ்குந்தா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் சாத்தனூர் அணையில் இருந்து கடந்த வாரம் பாசனத்துக்காக இடது மற்றும் வலது புற கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் கல்வாய், ஓடைகள் நிரம்பி வழிகின்றன.
குடியிருப்புக்குள் வெள்ளம்
இதனால் கரையோரம் உள்ள சில குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். சிலர் பாத்திரங்களை கொண்டு வீட்டில் புகுந்த தண்ணீரை அப்புறப்படுத்தினர்.
மேலும் புதூர் கூட்டு சாலையில் இருந்து சேராப்பட்டு செல்லும் சாலை வரை தண்ணீர் வழிந்தோடுவதால் சாலைகள் சேதம் அடைந்துள்ளன. கனமழை காரணமாக புதூர் பகுதியில் விவசாய நிலங்களில் மழைநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story