சரக்கு வேனில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் சாராயம் பறிமுதல்
காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு சரக்கு வேனில் கடத்திய ரூ.10 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் டிரைவரை கைது செய்தனர்.
நாகப்பட்டினம்:
காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு சரக்கு வேனில் கடத்திவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வேன் டிரைவரை கைது செய்தனர்.
வாகன சோதனை
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மது மற்றும் சாராய பாட்டில்கள் கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரும், தனிப்பிரிவு போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் கீழையூர் அருகே சீராவட்டம் பாலத்தில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை மறித்து சோதனை செய்தனர். அதில் மீன் ஏற்றி செல்லும் பிளாஸ்டிக் பெட்டிகளின், இடையே சாராய கேன்கள் இருந்தது தெரியவந்தது.
ரூ.10 லட்சம் சாராயம்
இதையடுத்து வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர், திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தை சேர்ந்த ராஜகோபால் மகன் சந்தோஷ் குமார் (வயது30) என்பதும், இவர், காரைக்காலில் இருந்து முத்துப்பேட்டைக்கு சரக்கு வேனில் 1,750 லிட்டர் சாராயத்தை கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து சந்தோஷ்குமாரை கைது செய்த தனிப்படை போலீசார், அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பிலான 50 சாராய கேன்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்து நாகை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து ஒப்படைத்தனர்.
பாராட்டு
இதுதொடர்பாக நாகை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய டூனிக்ஸ் மேரி வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறார்.
இதனிடையே மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸ் நிலையத்துக்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனிசாமி ஆகியோர் பறிமுதல் செய்யப்பட்ட சாராய கேன்களை பார்வையிட்டனர். தொடர்ந்து திறமையாக செயல்பட்டு சாராய கடத்தலில் ஈடுபட்டவரை கைது செய்த தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தனர்.
Related Tags :
Next Story