திருமூர்த்தி அணையில் செத்து மிதந்த மான் உடல் மீட்பு


திருமூர்த்தி அணையில் செத்து மிதந்த மான் உடல் மீட்பு
x
தினத்தந்தி 23 Oct 2021 10:47 PM IST (Updated: 23 Oct 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் செத்து மிதந்த மானின் உடலை வனத்துறையினர் அகற்றினார்கள்.

தளி
உடுமலை அருகே திருமூர்த்தி அணையில் செத்து மிதந்த மானின் உடலை வனத்துறையினர் அகற்றினார்கள்.
திருமூர்த்தி அணை
உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி அணையை ஆதாரமாகக் கொண்டு பி.ஏ.பி. பாசனம் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருமூர்த்தி அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற நீராதாரங்கள் பெரிதளவில் கை கொடுப்பதில்லை.
இதனால் பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. பாசனம் மற்றும் குடிநீர் திட்டங்கள் நடைமுறையில் இருப்பதற்கு இந்த காண்டூர் கால்வாய் ஆதாரமாக திகழ்வதுடன் வனப்பகுதியில் வசித்து வருகின்ற ஏராளமான விலங்குகளின் தாகம் தீர்க்கும் அட்சய பாத்திரமாகவும் விளங்கி வருகிறது.
வன விலங்குகள்
வறட்சிக்காலங்களில் வனவிலங்குகள் தாகம் தீர்த்துக்கொள்வதற்கு ஏதுவாக கால்வாயில் ஆங்காங்கே ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. ஆனாலும் தாகத்தோடு வருகின்ற குட்டி யானை, மான், காட்டெருமை உள்ளிட்டவை தண்ணீர் குடிக்கும்போது தவறி கால்வாயில் விழுந்து விடுவது வாடிக்கையாக உள்ளது. 
அதுமட்டுமின்றி உணவுக்காக செந்நாய்கள் துரத்தி வரும் போதும் வனவிலங்குகள் தவறி வாய்க்காலில் விழுந்து விடுகிறது. அவை தண்ணீரின் வேகத்திற்கு ஈடு கொடுத்து கால்வாயில் இருந்து மேலே வரமுடியாமல் செத்து விடுகின்றன. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காண்டூர் கால்வாய்க்கு தண்ணீர் குடிப்பதற்காக வந்த வனவிலங்கு ஒன்று கால்வாயில் தவறி விழுந்து விட்டதாக தெரிகிறது.
பெண் மான்
அந்த வனவிலங்கின் உடல் அழுகிய நிலையில் உப்பியபடி அணைப்பகுதியில் ஓரத்தில் மிதந்தது. தூரத்தில் இருந்து பார்க்கும்போது குட்டி யானையை போன்று காட்சியளித்த அதன் உடலில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் இறந்தது யானைக்குட்டியா? அல்லது மானா? என்ற சந்தேகம் சமூக ஆர்வலர்களிடையே வலுப்பெற்றது.
இது குறித்து நேற்று தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து உடுமலை வனச்சரக அலுவலர் தனபாலன் தலைமையில் வனவர் தங்கப்பிரகாஷ் உள்ளிட்ட வனத்துறையினர் நேற்று காலை அணைப்பகுதிக்கு சென்றனர். பின்னர் தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த வனவிலங்கின் உடலை கயிறு போட்டு மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அப்போது இறந்து கிடந்தது பெண் மான் என்றும், அதற்கு 4 வயது இருக்கும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.
பின்னர் அந்த மானின் உடலை கரையிலேயே பிரேத பரிசோதனை செய்த பிறகு குழி தோண்டி அடக்கம் செய்தனர்.

Next Story