திருவாரூர்:-
தஞ்சை அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
திருவாரூர் மாவட்டத்தில் 6-ம் கட்ட கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. முகாமை சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு செய்தார். முன்னதாக காப்பனாமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையம், திருவாரூர் கொடிக்கால்பாளையம் நகர்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாம்களை அமைச்சர் பார்வையிட்டு தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
அதன்பின்னர் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார். ஆய்வின்போது மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், திருவாரூர் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. ஆகியோர் இருந்தனர்.
ஆய்வுக்கு பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல் கிராமம்
தமிழகத்திலேயே முதன் முதலாக திருவாரூர் மாவட்டம் காட்டூர் தான் முழுமையாக கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்ட கிராமமாக அறிவிக்கப்பட்டது. திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் துணை சுகாதார நிலையங்களை சீரமைக்க வேண்டும். புதிய கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மாவட்டம் முழுவதும் 19 துணை சுகாதார நிலையங்களுக்கு தலா ரூ.30 லட்சம் வீதம் நிதி ஒதுக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்பட உள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு நிதி ஆண்டில் ரூ.8 கோடியே 37 லட்சம் மதிப்பில் சுகாதார துறை சார்ந்த கட்டிடங்கள் புனரமைப்பு செய்யப்பட உள்ளது.
காலாவதி மருந்துகள்
தஞ்சை அரசு மருத்துவமனையில் காலாவதியான மருந்துகள் வினியோகம் செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை சமர்ப்பித்த உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தவேண்டும் என மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதுதொடர்பாக இந்திய மருத்துவ கழகமும், உலக சுகாதார நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டால் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து விட்டதே என நினைத்து பொதுமக்கள் விதிமுறைகளை மீறக்கூடாது. விதிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும். அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
மக்களை தேடி மருத்துவம்
தொடர்ந்து திருவாரூர் அருகே ஆண்டிப்பாளையம் பகுதியில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ சேவையினை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சுகாதார இயக்குனர் செல்வவிநாயகம், துணை இயக்குனர் ஹேமசந்த் காந்தி, மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் கலியபெருமாள், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், ஒன்றியக்குழு தலைவர் தேவா, ஒன்றியக் குழு துணைத்தலைவர் பாலச்சந்திரன், மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ், சுகாதார இணை இயக்குனர் செல்வகுமார், அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.