நாமக்கல் மாவட்டத்தில் 6-ம் கட்டமாக நடந்த முகாமில் 59,473 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்


நாமக்கல் மாவட்டத்தில் 6-ம் கட்டமாக நடந்த முகாமில் 59,473 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 23 Oct 2021 5:32 PM GMT (Updated: 23 Oct 2021 5:32 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் 6-ம் கட்டமாக நடந்த முகாமில் 59,473 பேருக்கு கொரோனா தடுப்பூசி சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 6-ம் கட்டமாக நடந்த மெகா சிறப்பு முகாமில் 59,473 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
673 முகாம்கள்
தமிழகம் முழுவதும் நேற்று 6-ம் கட்டமாக மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டச்சத்து மையங்கள் மற்றும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் உள்ள 673 நிலையான முகாம்கள் மூலமாகவும், 77 நடமாடும் குழுக்கள் மூலமாகவும் தடுப்பூசி போடப்பட்டது. ஒரு சில இடங்களில் வயதான நபர்களுக்கு சுகாதாரத்துறையினர் வீடு தேடி சென்று
தடுப்பூசி செலுத்தினர்
இந்த பணிகளில் 210 மருத்துவர்கள், 430 செவிலியர்கள், 1600 அங்கன்வாடி பணியாளர்கள், 1400 தன்னார்வலர்கள், 415 பயிற்சி செவிலியர்கள் மற்றும் 265 பயிற்சி சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் 1400 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். இந்த முகாம் மூலம் சுமார் 1 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் காலை முதல் இரவு வரை நடந்த மெகா முகாமில் 59,473 பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூதாட்டிக்கு பாராட்டு
முன்னதாக நேற்று காலையில் நாமக்கல் உழவர்சந்தை அருகே உள்ள கூட்டுறவு அலுவலக வளாகம் மற்றும் மோகனூர் சாலை அய்யப்பன்கோவில் வளாகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ராஜேஸ்குமார் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நகராட்சி ஆணையாளர் பொன்னம்பலம் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். அப்போது கொரோனா தடுப்பூசி செலுத்த வந்த 85 வயது மூதாட்டிக்கு அவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு குலுக்கல் முறையில் தங்கக்காசு, வெள்ளிக்காசு மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வழங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க தொண்டு நிறுவனங்கள், வணிகர்கள், லாரி உரிமையாளர்கள், கோழிப்பண்ணையாளர்கள், நகைக்கடை உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்ததால், ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

Next Story