2 ஆயிரம் ஆண்டு பழமையான பள்ளிப்படை கோவில்கள்


2 ஆயிரம் ஆண்டு பழமையான பள்ளிப்படை கோவில்கள்
x
தினத்தந்தி 23 Oct 2021 11:15 PM IST (Updated: 23 Oct 2021 11:15 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் 2 ஆயிரம் ஆண்டு பழமையான பள்ளிப்படை கோவில்களில் மக்கள் வழிபாடு நடத்தி வருகிறார்கள்

பள்ளிப்படைக் கோவில்கள் என்பது இறந்து போன வீரர்கள், தலைவர்கள், அரசர்கள் ஆகியோரை புதைத்து அதன் மீது ஏற்படுத்தக்கூடிய கோவில்கள் ஆகும். தஞ்சை உடையாளூரில் ராஜராஜ சோழனுடைய பள்ளிப்படை கோவில் சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல திருப்பூரிலும் இப்படியான பள்ளிப்படை கோவில்கள் இன்றும் வழிபாட்டில் இருந்து வருவது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து திருப்பூர் வரலாற்று ஆய்வு மைய அமைப்பாளர் கவிஞர் சிவதாசன், உதவியாளர் எழுத்தாளர் முத்துபாரதி ஆகியோர் கூறியதாவது:-
பள்ளிப்படை கோவில்களை பார்க்கும்போது திருப்பூரில் கி.மு.2 ஆயிரம் ஆண்டு முந்தையை நாகரீகத்தை கொண்டது என்பது நிரூபணமாகிறது. புதிய கற்காலத்தின் இறுதியும், இரும்புக்காலத்திற்கும் முன்பான காலக்கட்டத்தில் வாழ்ந்த மக்கள், இறந்தவர்களுக்கு பெருங்கற்கள் படைச்சின்னங்களை ஏற்படுத்தும் வழக்கத்தை கொண்டுள்ளனர். இறந்தவர்களை ஈமத்தாழிகளில் இட்டும், புதைத்த இடத்தில் கல்வட்டங்கள், கற்பதுகைகள், கல்லறைகள் என்ற கல்வீடுகள் என பலவகைகளில் அமைத்தனர். 
கல்வட்டங்கள்
திருப்பூரின் வடக்கில் நல்லாற்றின் கரையோரம் பூம்பாறை, வெங்கமேடு, மும்மூர்த்திநகர் ஆகிய பகுதிகளில் பெருங்கற்படை சின்னங்கள் என்னும் கல்வட்டங்களும், பாரதிநகர், கஞ்சம்பாளையம், கவுண்டநாயக்கன்பாளையம், தொட்டிய மண்ணரை ஆகிய பகுதிகளில் கல்லறைகளும் காணப்படுகிறது. இந்த கல்லறைகள் பெரிய, பெரிய பலகை கற்களை மூன்று பக்கமும், பூமியில் நிறுத்தி வைத்து, மேல்புறம் கற்களால் மூடி கிழக்கு பக்கத்தை மட்டும் மூடாமல் வாசல் போல் விட்டுள்ளனர். இதற்குள் இறந்தவர்களின் அடையாளமாக ஒரு கல்லை நட்டு வைத்து வழிபட்டு வந்துள்ளனர்.
திருப்பூரில் ஊத்துக்குளி ரோட்டில் மண்ணரைக்கு வடக்கே பாப்பநாயக்கன்பாளையம், பொம்மநாயக்கன்பாளையம், கவுண்டநாயக்கன்பாளையம், தொட்டிய மண்ணரை ஆகிய பகுதிகளில் தெலுங்கு பேசும் சமூகத்தினர் அதிகம் வசிக்கிறார்கள். 
பள்ளிப்படை கோவில்கள்
தொட்டிய மண்ணரையில் கேட்டு தோட்டம் என்ற இடத்தில் தான் பழமையான பள்ளிப்படைக்கோவில்கள் உள்ளன. பிற்காலத்தில் 3 கோவில்களில் இப்பகுதி மக்கள் தங்கள் குல தெய்வங்களை வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள். மேலும் நிறைய கோவில்கள் இருந்ததற்கான அடையாளமாக பல இடங்களில் பலகை கற்கள் தரையில் சாய்ந்து கிடக்கின்றன. ஒரு சில குத்துக்கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் இவர்கள் குடியேறும் முன்பே குத்துக்கற்கள் இருந்துள்ளன. இந்த பகுதியில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு குடியேறி விட்டாலும், தங்களின் பூர்விகமான இந்த இடத்தில் தங்களில் முன்னோர்களுக்கான ஒரு நடுகல்லை நட்டி, இறந்தவரின் பெயர், தோற்றம், மறைவு ஆகியவற்றை பொறித்துள்ளனர். இதுபோல் நூற்றுக்கணக்கான கற்கள் இங்கு நடப்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் தை மாதம் இந்த மக்கள் அனைவரும் இங்கு கூடி மூத்தோருக்கு படையலிட்டு வழிபாடு செய்து வருகின்றனர். இங்குள்ள குலதெய்வ பள்ளிப்படை கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை திருவிழா நடத்துவதாக 36 ஊர் நாட்டாமை ரத்தினசாமி மற்றும் மாணிக்கம் ஆகியோர் தெரிவித்தனர். பழங்கால வழிபாட்டு நாகரீகத்தை இன்றும் திருப்பூரில் கடைபிடித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Next Story