மாநில அளவில் திருச்சி 3-வது இடத்தை பிடித்தது


மாநில அளவில் திருச்சி 3-வது இடத்தை பிடித்தது
x
தினத்தந்தி 23 Oct 2021 11:58 PM IST (Updated: 23 Oct 2021 11:58 PM IST)
t-max-icont-min-icon

6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி திருச்சி மாவட்டம் மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்தது.

திருச்சி, அக்.24-
6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாமில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி திருச்சி மாவட்டம்  மாநில அளவில் 3-வது இடத்தை பிடித்தது.
மெகா தடுப்பூசி முகாம்
திருச்சி மாவட்டத்தில் 6-வது கட்ட மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இதில் திருச்சி மாநகராட்சி பகுதியில் 202 இடங்களிலும், புறநகர்  பகுதிகளில் 427 இடங்களிலும் முகாம் நடத்தப்பட்டது.
தடுப்பூசி முகாம்களை மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு நேரில் சென்று பார்வையிட்டார். வையம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, மருங்காபுரி ஒன்றியம் டி.சுக்காம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியம் முத்தப்புடையான்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் நடந்த தடுப்பூசி முகாம்களை அவர் பார்வையிட்டார். இந்த மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1 லட்சம் பேருக்கு மேல் இலக்கை எட்டிவிட வேண்டும் என ஏற்கனவே கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்திருந்தார்.
மாநில அளவில் 3-வது இடம்
அதன்படி, நேற்றைய மெகா தடுப்பூசி முகாம் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 303 பேருக்கு தடுப்பூசி செலுத்தி சாதனை படைக்கப்பட்டது. அவற்றில் முதல் டோஸ் தடுப்பூசி மட்டும் 44 ஆயிரத்து 12 பேருக்கும், 2-ம் தவணை தடுப்பூசி 57 ஆயிரத்து 291 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை கொரோனா தடுப்பூசி 2-ம் தவணை செலுத்துவதில் பொதுமக்கள் போதிய ஆர்வம் காட்டாமல் இருந்தனர். ஆனால், நேற்று அதிக அளவில் 2-ம் தவணை தடுப்பூசியை மக்கள் செலுத்தி இருக்கிறார்கள்.
மாநில அளவில் நேற்று தடுப்பு செலுத்தியதில் திருச்சி மாவட்டம் 3-ம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளதாக மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்தார். முதல் இடத்தை சென்னை, 2-ம் இடத்தை கோவை பிடித்துள்ளது.

Next Story