மாவட்டத்தில் 624 இடங்களில் மெகா முகாம்: பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர் வீடு, வீடாகவும் சென்ற சுகாதார பணியாளர் குழு
புதுக்கோட்டை மாவட்டத்தில் 624 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
புதுக்கோட்டை:
தடுப்பூசி முகாம்
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் மும்முரமாக நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெற்று வந்த மெகா தடுப்பூசி முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் சமீபத்தில் நடந்த முகாம்களில் பொதுமக்கள் வருகை குறைவாக இருந்தது. இதற்கு காரணம் அன்றைய தினங்களில் அசைவப்பிரியர்கள், மதுப்பிரியர்கள் சிலர் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டாமல் இருந்ததும், பொதுமக்களிடையே ஒருவித வதந்தி இருந்ததும் என தெரியவந்தது. இதனால் மெகா முகாம் சனிக்கிழமைக்கு மாற்றப்பட்டது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 624 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தினர்.
பரிசுகள் அறிவிப்பு
புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் புடவை, சினிமா டிக்கெட்டுகள் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனாலும் புதுக்கோட்டை நகரப்பகுதியில் பொதுமக்கள் ஆர்வமாக தடுப்பூசி செலுத்தினர்.
புதுக்கோட்டை நகர்மன்ற வளாகத்தில் தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் பலர் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் முதல் தவணை, 2-ம் தவணை தடுப்பூசி டோஸ் போடப்பட்டது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை முகாம் நடைபெற்றது. முகாம் நடைபெற்றதை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
காரையூர், திருவரங்குளம்
காரையூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பாக மேலத்தானியம், ஒலியமங்களம், ஆலம்பட்டி உள்ளிட்ட 42 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். முகாமினை பொன்னமராவதி தாசில்தார் ஜெயபாரதி, துணை தாசில்தார் பிரகாஷ், பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் முகாமில் சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார செவிலியர்கள், கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் உள்பட பல்வேறு துறையைச் சேர்ந்த பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் திரளாக பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.
ஒரே நாளில் 38 ஆயிரத்து 654 டோஸ்கள் செலுத்தப்பட்டன
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடந்த மெகா முகாமில் பொதுமக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வீடு, வீடாகவும் சென்று சுகாதார பணியாளர்கள் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். மாவட்டத்தில் நேற்று நடந்த முகாமில் மொத்தம் 38 ஆயிரத்து 654 பேருக்கு தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டன.
Related Tags :
Next Story