மழையால் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை பணிகள் பாதிப்பு
தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் மழையால் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நெற்களஞ்சியம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறுவது வழக்கம். வழக்கமாக குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து ஜூன் மாதம் 12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படும்.
அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி இந்த ஆண்டு உரிய நேரத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரித்தது. அதன்படி இதுவரை இல்லாத அளவுக்கு தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 66 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது.
குறுவை அறுவடை பாதிப்பு
தற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தஞ்சை மாவட்டத்தில் விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் குறுவை அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து66 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. இதில் தற்போது வரை 1 லட்சத்து 40 ஆயிரம் ஏக்கரில் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன.
இன்னும் 16 ஆயிரம் ஏக்கர் வரை அறுவடை பணிகள் நடைபெற வேண்டி உள்ளது. குறுவை சாகுபடி செய்யப்படாத இடங்களில் சம்பா சாகுபடியும், குறுவை நடைபெற்ற இடங்களில் தாளடி சாகுபடியும் நடைபெற்று வருகிறது.
மழையால் விவசாயிகள் கவலை
இந்நிலையில் தொடர்ந்தும், விட்டு, விட்டும் மழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்து காணப்படுகிறது. இந்த மழை காரணமாக பல இடங்களில் நெற்பயிர்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது. பயிர்கள் சாய்ந்து அறுவடை தாமதம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே புத்தூர் பகுதியில், அறுவடைக்கு தயாராக இருந்த 6 ஏக்கர் நிலம் 10 நாட்களுக்கு மேலாக நீரில் மூழ்கி, அறுவடை எந்திரம் செல்ல முடியாத நிலையில் உள்ளதால் பயிரை அறுக்க முடியாத நிலையில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மகசூல் இழப்பு
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை நெற்பயிர்கள் சாய்ந்துள்ளதால் அறுவடை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதாலும், ஈரப்பதம் அதிகரிப்பதாலும் நெல் அறுவடை செய்வதற்கு கூடுதல் நேரம் ஆவதால் வாடகையும் அதிகமாக உள்ளது. மேலும் நெற்பயிர்கள் சாய்ந்ததால் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ளது.என்றனர்.
வைக்கோல் நாசம்
நாஞ்சிக்கோட்டை அருகேயுள்ள பொய்யுண்டார்கோட்டை, செல்லம்பட்டி, ஆதனக்கோட்டை, ஆத்தங்கரைப்பட்டி, பாச்சூர், தெக்கூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் குறுவை அறுவடை முடிந்தது. ஆனால் அறுவடை முடிந்த பிறகும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வயல்களில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல் அள்ளப்படாமல் அப்படியே நனைந்து அழுகி வீணாகி போவதாக விவசாயிகள் கூறுகின்றனர். ஒரு ஏக்கர் அறுவடை செய்தால் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.5000 வரை வைக்கோல் விற்பனை செய்யலாம். ஆனால் இந்த ஆண்டு தொடர்ந்து மழை பெய்து வருவதால் வைக்கோலை எந்திரம் வைத்து கட்டுகள் தயாரிக்க முடியவில்லை. இதனால் வைக்கோல் மழையில் அழுகி போவதால் அப்படியே வயலில் டிராக்டர் கொண்டு உழுது மீண்டும் தாளடி நடவு பணியில் ஈடுபடுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Related Tags :
Next Story