தொழில்அதிபா், கள்ளக்காதலி படுகொலை; மகனுக்கு போலீஸ் வலைவீச்சு
மைசூருவில் தொழில்அதிபர் மற்றும் அவருடைய கள்ளக்காதலி அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக தொழில் அதிபரின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மைசூரு: மைசூருவில் தொழில்அதிபர் மற்றும் அவருடைய கள்ளக்காதலி அடித்து கொலை செய்யப்பட்ட பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
இதுதொடர்பாக தொழில் அதிபரின் மகனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதல்
மைசூரு டவுன் ரிங்ரோடு ஸ்ரீநகரம் பகுதியை சேர்ந்தவர் சிவபிரகாஷ்(வயது 56). தொழில் அதிபர். இவருக்கு திருமணமாகி சாகர் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் சிவபிரகாசுக்கும் அதேப்பகுதியை சேர்ந்த லதா(48) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. லதா கணவரை இழந்து 3 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார்.
இதனால் சிவபிரகாஷ் அடிக்கடி லதாவின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார். அவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்துள்ளனர். லதா மற்றும் அவருடைய குழந்தைகளுக்கு தேவையான உதவிகளையும் சிவபிரகாஷ் செய்து வந்துள்ளார். இந்த கள்ளத்தொடர்பு விவகாரம் பற்றி அறிந்ததும் சாகர், தனது தந்தை சிவபிரகாசிடம் தகராறு ெசய்து வந்துள்ளார்.
கொலை
இந்த நிலையில் சாகர், கிரிக்கெட் சூதாட்டம், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதன்காரணமாக அவருக்கு ரூ.60 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. அந்த கடனை சிவபிரகாஷ் தீர்த்து வைத்துள்ளார். மேலும், தந்தையிடம் அடிக்கடி பணம் கேட்டு சாகர் தகராறு செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சிவபிரகாஷ், லதாவின் வீட்டில் இருந்தார்.
அப்போது அங்கு வந்த சாகர், தனக்கு உடனடியாக பணம் வேண்டும் என்று கேட்டு தந்தையிடம் தகராறு செய்தார். அப்போது சிவபிரகாஷ் பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சாகா், அங்கிருந்த கட்டையை எடுத்து சிவபிரகாசை சரமாரியாக தாக்கி உள்ளாா். அவரை தடுக்க முயன்ற லதாவையும், அவருடைய மகன் நாகர்ஜூனாவையும் தாக்கினார்.
இந்த தாக்குதலில் சிவபிரகாஷ், லதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். நாகர்ஜூனா பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
தப்பி ஓட்டம்
இதற்கிடையே அக்கம்பக்கத்தினர் லதா வீட்டுக்கு விரைந்து வந்துள்ளனர். இதனால் சாகர், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். சிவபிரகாஷ், லதா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், நாகர்ஜூனா உயிருக்கு போராடுவதையும் பார்த்து அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் நாகர்ஜூனாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மைசூரு புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் கொலையான சிவபிரகாஷ், லதாவின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைகாக கே.ஆர். அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
வலைவீச்சு
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், சிவபிரகாஷ் மற்றும் லதாவை சிவப்பிரகாசின் மகன் சாகர் அடித்து கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக மைசூரு புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சாகரை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் மைசூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story