முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி நெருக்கடி கொடுக்கவில்லை; எடியூரப்பா சொல்கிறார்
தனக்கு அதிகாரம் முக்கியம் இல்லை என்றும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை என்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஹாவேரி: தனக்கு அதிகாரம் முக்கியம் இல்லை என்றும், முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி யாரும் நெருக்கடி கொடுக்கவில்லை என்றும் முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தொகுதி இடைத்தேர்தல் பிரசார கூட்டத்தில் நேற்று முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பேசியதாவது:-
வெற்றி பெறுவது உறுதி
பிரதமர் மோடியை பார்த்து இந்த உலகமே ஆச்சரியப்படுகிறது. நாடு முழுவதும் 100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. வேறு எந்த ஒரு நாடும் இந்த சாதனையை நிகழ்த்தியது இல்லை. காங்கிரஸ் தலைவர்கள், பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டி வருகிறார்கள். அதுபோல், இடைத்தேர்தலிலும் காங்கிரசுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
ஹனகல் தொகுதியில் நமது வெற்றி எப்போதோ உறுதியாகி விட்டது. எத்தனை ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுகிறோம் என்பது தான் முக்கியம். ஹனகல் தொகுதியில் பா.ஜனதா வெற்றி பெற்றதும், மிகப்பெரிய அளவில் வெற்றி விழா நடத்தப்படும். அந்த வெற்றி விழாவில் கலந்து கொள்ள மீண்டும் ஹனகலுக்கு நான் வருவது உறுதி.
நெருக்கடி கொடுக்கவில்லை
நான் நெருக்கடி காரணமாக முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகிறார்கள். எனக்கு அதிகாரம் முக்கியம் இல்லை. அதிகாரம் இல்லை என்றாலும், நான் எங்கு சென்றாலும் எனக்கு ஆதரவாக தொண்டர்களான நீங்கள் இருப்பீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. வேறு ஒருவருக்கு பதவி கிடைக்க வேண்டும். அதற்காக தான் எனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன்.
பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாகி உள்ளார்.முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்யும்படி யாரும் எனக்கு நெருக்கடி கொடுக்கவில்லை.
வேறு ஒருவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். எனது ஒரே நோக்கம் அடுத்த சட்டசபை தேர்தலில் நமது சொந்த பலத்தில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான்.
140 தொகுதிகளில் வெற்றி பெறுவதே எனது குறிக்கோள். அதற்காக அடுத்த மாதம் (நவம்பர்) மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன். ஒவ்வொரு மாவட்டத்தின் கட்சி அலுவலகத்திற்கும் வந்து தொண்டர்களை சந்திப்பேன். பா.ஜனதா கட்சியை பலப்படுத்தும் பணியில் ஈடுபடுவேன்.
இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
Related Tags :
Next Story