திருவள்ளூரில் 6-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - அமைச்சர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு


திருவள்ளூரில் 6-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் - அமைச்சர், கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 24 Oct 2021 4:57 PM IST (Updated: 24 Oct 2021 4:57 PM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூரில் 6-ம் கட்ட மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இதில், அமைச்சர் மற்றும் கலெக்டர் கலந்து கொண்டனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் நகராட்சி உழவர் சந்தை அருகில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக மெகா கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக பால்வளத் துறை அமைச்சரும், தி.மு.க.வின் திருவள்ளூர் மத்திய மாவட்ட பொறுப்பாளருமான நாசர் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அதைத் தொடர்ந்து அவர், அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க், பேக்கரி, டீ கடை, மளிகை கடை, வணிக நிறுவனங்கள் என 30-க்கும் மேற்பட்ட கடைகளுக்கு சென்று தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்ட இடம் என்பதை எளிதில் கண்டறியும் வகையில் ஒட்டு வில்லைகளை நிறுவனங்களில் ஒட்டி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

பின்னர் அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது.,

தமிழக முதல்-அமைச்சரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் நேற்று 6-ம் கட்டமாக மாபெரும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் நேற்று சுமார் 1,200 தடுப்பூசி முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நேற்று 1 லட்சத்து 25 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணிக்காக மாவட்டம் முழுவதும் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள், முன் களப்பணியாளர்கள் என 4,800 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிந்து வருகிறார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்த தகுதி வாய்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட 18 லட்சத்து 88 ஆயிரத்து 300 நபர்கள் உள்ளனர். இதுவரை தடுப்பூசி செலுத்த பட்டவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 74 ஆயிரத்து 514 ஆகும். இதில் 72 சதவீத நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 28 சதவிகித நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.

2-வது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டியவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக கொரோனாவே இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்-அமைச்சர் பெரும் முயற்சியால் 95 சதவீதம் வெற்றி கண்டுள்ளார் என்பது பெருமைக்குரியதாகும் என அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வி.ஜி.ராஜேந்திரன், துரை சந்திரசேகர், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவகர்லால், திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திருவள்ளூர் ஆர்.டி.ஓ.ரமேஷ், டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story