இந்தியாவுக்கான அமெரிக்க பெண் தூதர் மாமல்லபுரம் வருகை - புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்
இந்தியாவுக்கான அமெரிக்க பெண் தூதர் மாமல்லபுரம் வருகை தந்தார். அவர் அங்கு உள்ள புராதன சின்னங்களை சுற்றி பார்த்தார்.
மாமல்லபுரம்,
இந்தியாவுக்கான அமெரிக்க பெண் தூதர் பெட்ரிஷியாஅனி லெசினா நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குண்டு துளைக்காத காரில் மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். முன்னதாக ஐந்துரதம் பகுதிக்கு வந்த அவரை வருவாய்த்துறை, சுற்றுலாத்துறை, தொல்லியல் துறை அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். ஐந்துரதத்தில் உள்ள அனைத்து சிற்பங்களையும் பார்த்த பிறகு சுற்றுலாத்துறை சார்பில் மாமல்லபுரம் வரலாற்று சின்னங்கள் பற்றிய குறிப்புகள் அடங்கிய சுற்றுலா தகவல் புத்தகம் வழங்கப்பட்டது.
பிறகு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்திற்குள் நடந்து சென்று பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட கடற்கரை கோவிலின் எழில்மிகு தோற்றத்தை கலை நயத்துடன் கண்டுரசித்தார். கடற்கரை கோவிலின் இரு கருவறைகளில் வீற்றிருக்கும் சிவன், விஷ்ணு சன்னதிகள், முகப்பு வாயிலில் உள்ள நந்தி சிலைகளையும் அவர் பார்வையிட்டார். கடற்கரை கோவில் வளாகத்தின் முன் பகுதியில் உள்ள மாமல்லபுரம் துறைமுக பட்டினமாக இருந்ததற்காக சான்றான படகு துறை, அகழி பகுதிகளையும் பார்வையிட்டார்.
அப்போது உடன் வந்த அமெரிக்கா நாட்டை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் கடற்கரை கோவில் உருவாக்கப்பட்டதன் பின்னணி, கடல் ஓரத்தில் பல 100 ஆண்டுகளுக்கு முன் அவை எப்படி கட்டப்பட்டது. கடல் உப்பு காற்று அரிக்காத வகையில் எப்படி கோவில் பழமை மாறாமல் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது என்பது போன்ற தகவல்களை விரிவாக விளக்கி கூறினார். அவரிடம் அமெரிக்க பெண் தூதர் கடற்கரை கோவிலின் அரிய தகவல்களை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார். கடற்கரை கோவிலின் அனைத்து சிற்பங்களை ரசித்து பார்த்த அவர் அங்கு நின்று தனனுடைய செல்போன் மூலம் புகைப்படம் எடுத்து கொண்டார். அவரது வருகையை முன்னிட்டு மாமல்லபுரம் கடற்கரை கோவில், ஐந்துரதம் உள்ளிட்ட முக்கிய புராதன சின்னங்களில் செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில், மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story