திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு நேற்று தங்கதேர் ஓடியது
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 6 மாதத்திற்கு பிறகு நேற்று தங்கதேர் ஓடியது
திருச்செந்தூர்:
திருப்பதியை போன்று பக்தர்கள் இருக்கையில் அமர்ந்து சென்று சாமி தரிசனம் செய்ய வசதியாக திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் காத்திருப்பு கூடம் திறக்கப்பட்டது.
சுப்பிரமணிய சுவாமி கோவில்
முருகனின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள்.
கோவிலில் பொது தரிசனம், கட்டண தரிசனம் மூலம் பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். மேலும் பக்தர்கள் வரிசையில் பல மணிநேரம் கால் கடுக்க காத்திருந்து தரிசனம் செய்து வந்தனர். இதனால் வயதான பக்தர்கள், பெண்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர்.
பக்தர்கள் காத்திருப்பு கூடம் திறப்பு
இதனை தவிர்க்கும் வகையில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்று திருச்செந்தூர் கோவிலிலும் தரிசனம் செய்ய செல்லும் பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் காத்திருப்பு கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக பொது தரிசனத்தில் செல்லும் பக்தர்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக ராஜகோபுரம் அருகில் இருந்த காவடி மண்டபம் 'பக்தர்கள் காத்திருக்கும் கூடம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அங்கு 408 பேர் அமரும் வகையில் இருக்கைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின் விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருக்கும் கூடம் நேற்று திறக்கப்பட்டது.
இதை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் தரிசனத்திற்கு வந்த பக்தர்களுக்கு கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி இனிப்பு வழங்கினார். தொடர்ந்து தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் இருக்கைகளில் அமர்ந்து விட்டு தரிசனம் செய்து சென்றனர்.
கூட்ட நெரிசலின்றி
இதுகுறித்து கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழக முதல்-அமைச்சரின் அறிவுரையின் படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட உள்ளது. இதன் முதல்கட்டமாக பொது தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் விதமாக இந்த காத்திருக்கும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து, கூட்ட நெரிசலின்றி எளிமையாக தரிசனம் செய்ய முடியும்' என்றார்.
தங்கத்தேர்
இதற்கிடையே சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி முதல் தங்க தேர் ஓடாமல் இருந்தது. ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அனைத்து நாட்களிலும் கோவில்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், 6 மாதத்திற்கு பிறகு நேற்று மாலையில் கோவிலில் தங்கத்தேர் புறப்பாடு தொடங்கியது. கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) அன்புமணி, தனது மகள் குறிஞ்சிமலர் பெயரில் தங்கத்தேர் இழுப்பதற்கு பணம் கட்டியிருந்தார். இதையடுத்து இணை ஆணையர் தனது மகளுடன் தங்கத்தேர் இழுத்தார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளிய தங்கத்தேர் கோவில் கிரிபிரகாரத்தில் வலம் வந்தது.
இந்த நிகழ்ச்சியில், கோவில் கண்காணிப்பாளர்கள் கோமதி, ராமசுப்பிரமணியன், ராஜ்மோகன், மக்கள் தொடர்பு அலுவலர் மாரிமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story