கடலூரில், புத்தாடை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது


கடலூரில், புத்தாடை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது
x
தினத்தந்தி 24 Oct 2021 8:41 PM IST (Updated: 24 Oct 2021 8:41 PM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கடலூரில் புத்தாடை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோத தொடங்கியது.

கடலூர், 

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி வருகிற 4-ந்தேதி (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை கொண்டாட கடலூர் நகர மக்கள் தயாராகி விட்டனர். தீபாவளி என்றாலே பட்டாசும், புத்தாடைகளும் தான் நினைவுக்கு வரும். இதை வாங்குவதற்காக நகரத்தை சுற்றியுள்ள கிராம மக்கள் அனைவரும் கடலூருக்கு வருகை தருவார்கள்.
ஆனால் இன்னும் பட்டாசு கடைகள் திறக்காத நிலையில், புத்தாடைகள் வாங்குவதற்காக பொதுமக்கள் நகர வீதிகளில் உள்ள ஜவுளி கடைகளுக்கு வரத்தொடங்கி விட்டனர். சிறிய ஜவுளி கடைகள் முதல் பெரிய ஜவுளி கடைகள் வரை சென்று  தங்களுக்கு பிடித்தமான புத்தாடைகளை வாங்க தொடங்கி விட்டனர்.

கண்காணிப்பு கோபுரங்கள்

இதனால் கூட்டம் அதிகரிக்க தொடங்கி வருகிறது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டக்கூடாது என்பதற்காகவும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும் நகர முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பார்கள்.
அதன்படி கடலூர் அண்ணா பாலம் அருகில் உள்ள சிக்னல், பஸ் நிலையம் நாகம்மன் கோவில் ஆகிய இடங்களில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி வருகின்றனர்.
விரைவில் மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட் பகுதியிலும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து கண்காணிக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story