தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 24 Oct 2021 9:59 PM IST (Updated: 24 Oct 2021 9:59 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவில் தேங்கும் சாக்கடை நீர்

நெல்லை மாவட்டம் தருவை ஊராட்சி கடை தெருவில் சாக்கடை நீர் சாலையின் மேற்பரப்பில் செல்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். தற்போது பெய்த மழையால் அந்த பகுதி சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி இதை சீரமைக்க வேண்டுகிறேன்.
மணி, தருவை.

சாலை வசதி 

பாளையங்கோட்டை மண்டலம் 14-ம் வார்டு செந்தில்நகரில் வாறுகால் வாறுகால் வசதி இல்லாததால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மேலும் சாலை வசதி இல்லாததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுவதோடு, மழைநீர் தேங்கி டெங்கு ஏற்படும் சூழ்நிலை நிலவுகிறது. இதேபோல் தெருவில் உள்ள மின்விளக்குகளும் எரியாததால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகிறார்கள். ஆகவே அதிகாரிகள் இதுசம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கார்த்திக், செந்தில்நகர்.

சிமெண்டு சாலை அமைக்க வேண்டும் 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தாலுகா வெங்கடேஸ்வரபுரம் வடக்கு அம்மன் கோவிலுக்கு செல்லும் தெருவில் குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பகுதி பள்ளமாக காணப்படுகிறது. இதனால் தெருவில் பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகிறார்கள். எனவே அங்கு சிமெண்டு சாலை அமைத்து தெருவை சரிசெய்ய வேண்டுகிறேன்.
மகாராஜா, வெங்கடேஸ்வரபுரம்.

மின்விளக்கு எரியுமா?

சுரண்டை அருகே உள்ள ஆணைகுளம் கிராமம் 1-வது வார்டு ஊருணி தெருவில் உள்ள மின்விளக்குகள் கடந்த 2 மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் மக்கள் வெளியே வர சிரமமாக உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்விளக்குகளை எரியவைப்பார்களா?
செல்வக்குமார், ஆணைகுளம். 

சேதம் அடைந்த குடிநீர் தொட்டி

ஆலங்குளம் அருகே உள்ள ஓடைமறிச்சான் பஞ்சாயத்து உடையாம்புளி கிராமத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக குடிநீர் தொட்டி அமைத்து அதில் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. நாளடைவில் இந்த குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பழுதானது. இதேபோல் குடிநீர் தொட்டியும் சேதம் அடைந்துள்ளது. இதனால் பொதுமக்கள் சீராக குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த குடிநீர் தொட்டி, குழாயை புதுப்பித்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். 
மனோஜ்குமார், உடையாம்புளி. 

ஆபத்தான மின்கம்பம் 

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் காவடிப்பிறை தெருவில் உள்ள மின்கம்பம் அடிப்பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கீழே விழுந்து விடுமோ என்ற ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி இந்த மின்கம்பத்தை சரிசெய்ய வேண்டுகிறேன்.
சிவக்குமார், குலசேகரன்பட்டினம்.

பஸ் இயக்க வேண்டும்

ஓட்டப்பிடாரம் தாலுகாவில் அய்யர்பட்டி முள்ளூர் கிராமம் உள்ளது. இந்த ஊரில் இருந்து ஏராளமான மாணவ-மாணவிகள் அருகில் உள்ள காட்டுநாயக்கன்பட்டியில் படித்து வருகிறார்கள். ஆனால் இவர்கள் வந்து செல்ல போதுமான பஸ் வசதி இல்லை. தூத்துக்குடியில் இருந்து எப்போதும் வென்றான், ஆதனூர் வழியாக அரசு பஸ் மிளகுநத்தம் வரை இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை அருகில் உள்ள அய்யர்பட்டி முள்ளூர் கிராமம் வரை இயக்க வேண்டும். இவ்வாறு பஸ்சை இயக்கினால் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்திற்கு சென்று வரை வசதியாக இருக்கும். இதுதொடர்பாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
குபேந்திரபெருமாள், முள்ளூர். 

Next Story