ஆற்றுப்பாலத்தை சீரமைக்க கோரி செஞ்சியில் பொதுமக்கள் சாலை மறியல்


ஆற்றுப்பாலத்தை சீரமைக்க கோரி  செஞ்சியில் பொதுமக்கள் சாலை  மறியல்
x
தினத்தந்தி 24 Oct 2021 10:29 PM IST (Updated: 24 Oct 2021 10:29 PM IST)
t-max-icont-min-icon

பழுதான ஆற்றுப் பாலத்தை சீரமைக்க கோரி செஞ்சியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

செஞ்சி,

செஞ்சியில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று உள்ளது. பழமைவாய்ந்த இப்பாலத்தின் வழியாக தான் திண்டிவனம் பகுதிக்கு வாகனங்கள் வந்து செல்கின்றன. 

இந்த பாலம் பழமைவாய்ந்து இருப்பதால், கான்கிரீட் கம்பிகள் ஆங்காங்கே வெளியே தெரிந்தபடி உள்ளது. இதனால் பாலம் அதன் உறுதிதன்மையை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் அச்சத்துடனே இந்த பாலத்தை கடந்து சென்று வருகிறார்கள். 

சாலை மறியல்

சில நேரங்களில் பாலத்தில் உள்ள கான்கிரீட் கம்பிகள் வாகனங்களின் டயர்களையும் பதம் பார்த்து விடுகிறது. இதனால்,  அடிக்கடி வாகனங்கள் இந்த பகுதியில் பஞ்சர் ஆகி நிற்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. 

பழுதடைந்த இந்த பாலத்துக்கு பதிலாக புதிய பாலம் வேண்டும் மற்றும் சேதமடைந்த பகுதியை தற்காலிகமாக சீரமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். ஆனால் அதிகாரிகள் யாரும் இதை கண்டுகொள்வதே கிடையாது.

இந்த நிலையில் நேற்று களவாய் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஒன்றிணைந்து பாலத்தை சீரமைக்க கோரி அந்த பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தை

 இதுபற்றி அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு  இளங்கோவன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், துறை அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு சென்று தேவையான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். 

இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே நேற்று மாலை, தற்காலிகமாக பாலத்தை சீரமைக்கும் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டனர்.

Next Story