முழுகொள்ளளவை எட்டியதால் கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 800 கனஅடி நீர் வெளியேற்றம்
முழு கொள்ளளவை எட்டியதால் கோமுகி அணையில் இருந்து வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் சங்கராபுரம் மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
கச்சிராயப்பாளையம்
கோமுகி அணை
கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இதன் மொத்த நீர்மட்டம் 46 அடி என்றாலும் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை தண்ணீர் சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய பாசனம், பழைய பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் முதல் வாரத்தில் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பழைய மற்றும் புதிய பாசன வாய்க்கால் வழியாக விவசாயத்துக்கு தண்ணீர் வழங்கப்பட்டது. அதன்பிறகு நீர் மட்டம் 25 அடியாக குறைந்ததும் மீன் வளர்ப்புக்காக அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.
பரவலாக மழை
இந்த நிலையில் வெப்ப சலனம் மற்றம் வழிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் கல்படை, பொட்டியம் ஆகிய ஆறுகளின் வழியாக அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால் 25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஒரு வாரத்தில் 38 அடியாக அதிகரித்தது.
கடந்த 2 நாட்களாக கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் அணைக்கு வினாடிக்கு 250 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்ததால் அணையின் நீர் மட்டம் மேலும் அதிகரித்து 41 அடியாக உயர்ந்தது. கடந்த 5 நாட்களில் மட்டு்ம் நீர் மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
தண்ணீர் திறப்பு
பின்னர் நேற்று முன்தினம் இரவு கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் கோமுகி அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்ததால் அணை அதன் முழு மொத்த நீர் மட்டமான 44 அடியை எட்டியது.
இதனால் அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் என்ற நிலை இருந்தால் கரையோர பகுதிமக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து நேற்று அணையில் இருந்து ஆற்று பாசன வாய்கால் வழியாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
மணி நதி
கோமுகி அணை திறக்கப்பட்டுள்ளதால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள எட்டி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து அப்பகுதியில் உற்பத்தியாகும் மணிநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த தண்ணீர் அரசம்பட்டு, பூட்டை, தியாகராஜபுரம், சங்கராபுரம் கீழப்பட்டு வழியாக சூளாங்குறிச்சி மணிமுக்தாறு அணையை சென்றடைகிறது. பின்னர் அங்கிருந்து ஆறு, வாய்க்கால்களில் பாய்ந்தோடும் வெள்ளம் ஏரி, குளங்களை சென்றடைகிறது. மணி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story