‘தினத்தந்தி’ புகார் பெட்டி


‘தினத்தந்தி’ புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Oct 2021 12:49 AM IST (Updated: 25 Oct 2021 12:49 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

ஆபத்தான மின்கம்பங்கள்
திருச்சி அம்பிகாபுரம் செல்லும் வழியில்  தங்கேஸ்வரி நகர், மேலத்தெரு, கீழத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள மின்கம்பங்களில் சிமெண்டு பூச்சு உதிர்ந்து எலும்பு கூடாக இருப்பதை படத்தில் காணலாம்.
நரேஷ், திருச்சி.
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் ஜே.கே. நகர் மற்றும் அதன் அருகருகே அமைந்துள்ள நகர்ப்புற பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பாதாள சாக்கடை பணியின் காரணமாக தோண்டப்பட்ட சாலைகள் தற்போது பெய்த மழையின் காரணமாக சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கால்நடையாக சாலைகளில் பயணிப்பதும் கால்நடைகளுக்கு கூட சாத்திய படாத நிலைதான் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடித்து இப்பகுதியில் தார்சாலை அமைக்க வேண்டும். 
ஜே.கே. நகர் குடியிருப்பு மக்கள், திருச்சி.
கால்நடைகளால் போக்குவரத்து பாதிப்பு
திருச்சி மாவட்டம் உறையூரில் இருந்து குழுமணி செல்லும் சாலையில் லிங்கநகர் பகுதியில் சாலையின் நடுவில் குதிரை, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் நிற்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் அந்த சாலையில் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டு கால்நடைகள் இறக்கும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள கால்நடைகளை பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
சக்திவேல். மருதாண்டகுறிச்சி.
பாசன வாய்க்காலில் செடி, கொடிகள் ஆக்கிரமிப்பு
திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர் தாலுகா, கிளியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்கு அருகே பாசன வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் செடி, கொடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் தண்ணீர் செல்ல வழியின்றி தேங்கி கிடக்கிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரகேட்டை ஏற்படுத்தி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பாசன வாய்க்காலில் உள்ள செடி கொடிகளை அகற்றி தண்ணீர் சீராக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திலீபன், திருச்சி.
கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
திருச்சி சங்கிலியாண்டபுரம் பாத்திமா தெருவில்  பாதாள சாக்கடைகள் தூர்வாரப்படாமல் உள்ளது.  மேலும், பாதாள சாக்கடைகள் நிரம்பி வீடுகள் முன்பு கழிவுநீர் செல்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அர்ஜுன், திருச்சி.
நடைபாதையில் நிறுத்தப்படும் வாகனங்கள்
திருச்சி மாவட்டம் சத்திரம் பஸ் நிலையம் முதல் சிங்காரத்தோப்பு வரை பாதசாரிகளுக்கு போடப்பட்டுள்ள நடைபாதை மேடையில் இருசக்கர வாகனங்கள் அதிகளவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதசாரிகள்  சாலையில் நடக்க வேண்டிய அவலம் உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
பார்த்திபன், திருச்சி.
புதர் செடிகளை அகற்ற கோரிக்கை
திருச்சி மாவட்டம் திருவானைக்காவல் மேலக்கொண்டயம்பேட்டை பச்சையம்மன் கோவில் எதிரில் உள்ள ஆற்று வாய்க்காலில் புதர் மற்றும் வெங்காயத்தாமரை செடிகள் அதிகளவில் வளர்ந்து உள்ளது. மேலும், ஆற்று வாய்க்காலில் குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மீனா, திருச்சி.
சுகாதாரமற்ற நீர்த்தேக்க தொட்டி
திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகா, திருநெல்லிப்பட்டி கிராமத்தில் உள்ள நீர்த்தேக்க தொட்டி சுகாதாரமற்று காணப்படுகிறது. காவிரி குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் வீணாக செல்கிறது. குடிநீர் வழங்கும் மின் சாதன பெட்டி மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிராம மக்கள், திருச்சி.
நோய் பரவும் அபாயம்
திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மேய்க்கல் நாயக்கன்பட்டி கிராமத்தில் அரசினர் தொடக்கப்பள்ளி அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் வரும் ஆற்றுநீரைத்தான் குடிநீர் ஆதாரமாக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அங்கு படிக்கும் மாணவர்களும் இந்த குடிநீரைத்தான்  பயன்படுத்துகின்றனர். இந்தநிலையில் குழாய்களில் இருந்து வீணாகும் குடிநீர் வெளியேற முடியாமல் அங்கேயே குட்டைப்போல் தேங்கியுள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மணி, திருச்சி.
குண்டும், குழியுமான சாலை
திருச்சி திருவெறும்பூர் 64-வது வார்டுக்குட்பட்ட பகவதிபுரம் ஆனந்தா நகரில் உள்ள சாலைகள் மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையை சீரமைக்கக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிருபாகரன், திருச்சி


Next Story