ஜவுளிக்கடையில் தீ விபத்து; ரூ.30 லட்சம் துணிகள் நாசம்


ஜவுளிக்கடையில் தீ விபத்து; ரூ.30 லட்சம் துணிகள் நாசம்
x
தினத்தந்தி 25 Oct 2021 2:21 AM IST (Updated: 25 Oct 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

புளியங்குடியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீவிபத்தில் ரூ.30 லட்சம் துணிகள் நாசமானது.

புளியங்குடி:
புளியங்குடியில் ஜவுளிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.30 லட்சம் துணிகள் நாசமானது.

தீ விபத்து

தென்காசி மாவட்டம் புளியங்குடி ஜின்னாநகர் 3-ம் தெருவை சேர்ந்தவர் முகைதீன் பிச்சை (வயது 47). இவர் புளியங்குடி காந்திபஜார் சங்கரவிநாயகர் கோவில் தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். 
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு கடையை அடைத்துவிட்டு ஊழியர்கள் அனைவரும் வீட்டிற்கு சென்றனர். நள்ளிரவில் கடையில் திடீரென்று தீவிபத்து ஏற்பட்டு, கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து புளியங்குடி போலீசுக்கும் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

ரூ.30 லட்சம் துணிகள் நாசம்

வாசுதேவநல்லூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஷேக் அப்துல்லா, கடையநல்லூர் நிலைய அலுவலர் குணசேகரன், சங்கரன்கோவில் நிலைய அலுவலர் விஜயன் ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். மற்ற பகுதிகளுக்கும் தீயை பரவவிடாமல் தடுத்தனர். 
எனினும் இந்த தீவிபத்தில் ஜவுளிக்கடையில் இருந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான துணிகள் கருகி நாசமானதாக கூறப்படுகிறது. 
புளியங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். மின்கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 
புளியங்குடியில் ஜவுளிக்கடையில் தீவிபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story