தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 25 Oct 2021 9:25 PM IST (Updated: 25 Oct 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சேதமடைந்த மின்கம்பம் 
கொடைக்கானலில் இருந்து பள்ளங்கி செல்லும் சாலையில் அன்னை தெரசா பல்கலைக்கழகம் அருகே சேதமடைந்த நிலையில் மின்கம்பம் உள்ளது. அது பலத்த காற்று வீசும் நேரத்தில் முறிந்து விழுந்து விடும் அபாயம் உள்ளது. மாணவிகள், பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியாக இருப்பதால், சேதமான மின்கம்பத்தை உடனடியாக மாற்ற வேண்டும். 
-ரெங்கராஜன், கொடைக்கானல்.
பெயர் பலகையின் பரிதாபம்
ஆத்தூரில் இருந்து சித்தையன்கோட்டை செல்லும் சாலையில் இருந்து காமராஜர் அணைக்கு சாலை பிரிந்து செல்கிறது. இங்கு அமைக்கப்பட்டு இருந்த பெயர் பலகை சாய்ந்து கிடக்கிறது. நெடுஞ்சாலைத்துறையின் பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டு உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் குழப்பம் அடைகின்றனர். அதை தவிர்க்க பெயர் பலகைகளை சரிசெய்ய வேண்டும். 
-ராமு, செம்பட்டி.
புதிய பாலம் கட்டப்படுமா?
சின்னமனூர் நகராட்சி 1-வது வார்டு கீழபூலானந்தபுரத்தில் காளியம்மன் கோவில் அருகே உள்ள பாலம் சேதம் அடைந்து விட்டது. மேலும் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி நிற்கிறது. எனவே புதிதாக பாலம் கட்டுவதோடு, சாக்கடை கால்வாயை தூர்வாரி அடைப்பை சரிசெய்ய வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.
விபத்தை தடுக்க வேகத்தடுப்பு 
பழனி அருகே உள்ள சின்ன கலையம்புத்தூரில் பள்ளிக்கூடம், கோவில் அமைந்துள்ள பகுதியில் சாலையில் அபாய வளைவு உள்ளது. அந்த பகுதியில் வாகனங்கள் அதிக வேகமாக செல்வதால், அடிக்கடி விபத்து நடக்கிறது. அதை தடுப்பதற்கு வேகத்தடைகள் அல்லது வேகத்தடுப்புகள் அமைக்க வேண்டும். 
-அம்சராஜ், சின்னகலையம்புத்தூர்.
பயன்படாத குடிநீர் எந்திரம் 
தேனி புதிய பஸ் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக குடிநீரை சுத்திகரித்து வழங்கும் எந்திரம் வைக்கப்பட்டு இருந்தது. அந்த எந்திரம் பழுதாகி நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. எனினும் இதுவரை அதை சரிசெய்யவில்லை. இதனால் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், பயன்படாத எந்திரத்தை பரிதாபமாக பார்த்து செல்கின்றனர். எனவே குடிநீர் எந்திரத்தை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். 
-செல்வேந்திரன், தேனி.
தெருநாய்கள் தொல்லை 
தேனி அருகே உப்புக்கோட்டை பகுதியில் தெருநாய்கள் கூட்டம், கூட்டமாக சுற்றித்திரிகின்றன. சாலையோரத்தில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தின்று வளரும் நாய்கள், கால்நடைகளை மட்டுமின்றி தெருவில் விளையாடும் குழந்தைகளையும் கடிக்கின்றன. தெருநாய்களின் தொல்லையை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
-காமேஸ்வரி, உப்புக்கோட்டை.

Next Story