கோமுகி அணையை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு


கோமுகி அணையை கள்ளக்குறிச்சி கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 25 Oct 2021 4:32 PM GMT (Updated: 25 Oct 2021 4:32 PM GMT)

உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் கோமுகி அணையை கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்


கச்சிராயப்பாளையம்

கோமுகி அணை

கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இதன் மொத்த நீர்மட்டம் 46 அடி என்றாலும் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் புதிய பாசனம், பழைய பாசன வாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
இந்த நிலையில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கல்வராயன்மலை நீர்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் 25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து கடந்த ஒரு வாரத்தில் 38 அடியாக அதிகரித்தது.

தண்ணீர் திறப்பு

பின்னர் தொடர்ந்து நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் அணையின் நீர் மட்டம் படிப்படியாக அதிகரித்து 44 அடியை எட்டியது. இதனால் அணை எப்போது வேண்டுமானாலும் திறக்கலாம் என்ற நிலை இருந்ததால் கரையோர பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். 
இதையடுத்து நேற்று முன்தினம் அணையில் இருந்து ஆற்று பாசன வாய்க்கால் வழியாக வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயிர் சாகுபடியில் தீவிர ஆர்வம் காட்டி வருகின்றனர். 

கலெக்டர் ஆய்வு

தொடர்ந்து கல்படை, பொட்டியம் ஆறுகளின் வழியாக கோமுகி அணைக்கு வரும் 400 கனஅடி தண்ணீரும் உபரிநீராக வெளியேற்றப்படுகிறது. மழைதொடர்ந்து பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று கோமுகி அணையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அணையின் பாதுகாப்பு குறித்தும், கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்படும் பட்சத்தில் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் குறித்தும் பொதுப்பணி துறை அதிகாரிகளிடம் கலெக்டர் கேட்டறிந்தார்.  அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் சுதர்சன், சின்னசேலம் தாசில்தார் ஆனந்த சயன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story