திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தாய்-மகள் உள்பட 3 பேர் தீக்குளிக்க முயற்சி
x
தினத்தந்தி 25 Oct 2021 10:14 PM IST (Updated: 25 Oct 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

தாய்-மகள் உள்பட 3 பேர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:
தாய்-மகள் உள்பட 3 பேர் அடுத்தடுத்து தீக்குளிக்க முயன்றதால், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
தாய்-மகள் தீக்குளிக்க முயற்சி
திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் இருந்தே கலெக்டர் அலுவலகத்துக்கு பொதுமக்கள் வரத்தொடங்கினர். இந்த நிலையில் கையில் பையுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு ஒரு பெண்ணும், அவருடைய மகளும் வந்தனர்.
 பின்னர் திடீரென பையில் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை எடுத்த அந்த பெண் தனது உடலில் ஊற்றியதுடன் மகளின் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அப்போது கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஓடிச்சென்று 2 பேரையும் தடுத்து நிறுத்தினர். 
இதனையடுத்து 2 பேர் மீது தண்ணீரை ஊற்றிய போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்த பெண், நிலக்கோட்டை தாலுகா பள்ளப்பட்டியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி வனிதா (வயது 50) என்பது தெரியவந்தது. அவர் போலீசாரிடம் கூறுகையில், எனது கணவருக்கு கிடைத்த பூர்வீக சொத்துகளை 2-வது மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு கொடுத்துவிட்டார். நானும், எனது மகள், மகனும் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறோம். இதனால் விரக்தி அடைந்த நான், எனது மகளுடன் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். 
பரபரப்பு
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த மாவட்ட கலெக்டர் விசாகன், தாய், மகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். 
இதையடுத்து போலீசார், 2 பெண்களையும் தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். இதேபோல் திண்டுக்கல் குருசாமிஆசாரி தெருவை சேர்ந்த கைருன்னிஷா (60) என்பவரும் கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். 
அப்போது, தான் பல ஆண்டுகளாக வசித்து வரும் வீட்டை காலி செய்யும்படி கூறி சிலர் மிரட்டி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து தீக்குளிக்க முயன்றதாக அவர் ெதரிவித்தார். பின்னர் அவரை சமாதானப்படுத்திய போலீசார், கோரிக்கை குறித்து கலெக்டரிடம் மனு அளிக்க ஏற்பாடு செய்தனர். பின்னர் அவரை தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்துக்கு போலீசார் அழைத்துச்சென்றனர். 
கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து 3 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story