தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டியில் வெளிவந்த செய்திகள் வருமாறு:-
சுகாதார சீர்கேடு
மயிலாடுதுறையில் உள்ள பஜனை மடத்தெருவில் சாலையில் மழைநீர் மற்றும் கழிவு நீர் தேங்கி கிடக்கிறது.இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது.இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட்டு அந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் தேங்கி கிடக்கும் மழைநீர் மற்றும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், மயிலாடுதுறை.
சேதமடைந்த பயணிகள் நிழலகம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா மணலி ஊராட்சியில் பொதுமக்கள் வசதிக்காக பயணிகள் நிழலகம் அமைக்கப்பட்டது.இந்த பயணிகள் நிழலகத்தை தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பயணிகள் நிழலகம் முழுவதும் சேதமடைந்து காணப்படுகிறது. நிழலகத்தில் உள்ள இருக்கைகள் உடைந்து கிடக்கின்றன.மேலும், பயணிகள் நிழலகம் ஆபத்தான நிலையில் உள்ளதால் அதன் அருகே பஸ்சுக்காக பயணிகள் மழையிலும், வெயிலிலும் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்துள்ள பயணிகள் நிழலகத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-விஜயபாலன், திருத்துறைப்பூண்டி,
ஆபத்தான மின்கம்பம்
திருவாரூர் மாவட்டம் புதூர் பாலத்தில் இருந்து தெற்கு தெரு செல்லும் சாலையில் உள்ள 4-வது மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. மின்கம்பத்தில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே உயிர்பலி ஏற்படும் முன்பு ஆபத்தான ந மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின் கம்பம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மகேந்திரன், புதூர்.
குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருவாலங்காடு ஊராட்சி பகுதியில் உள்ளது ஆலவத்தாடி. இந்த பகுதியில் உள்ள குடிநீர் தொட்டி பராமரிப்பின்றி புதர்மண்டி காணப்படுகிறது.குறிப்பாக குடிநீர் தொட்டியில் மூடி இல்லாமல் இருக்கிறது.இதனால் குடிநீர் தொட்டிக்குள் பறவைகளின் எச்சம் மற்றும் தவளைகள் உள்ளிட்டவை விழுந்து விடுகின்றன.இதனால் பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்றி விட்டு புதிதாக மூடி அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சுதாமன், மயிலாடுதுறை.
கால்நடைகளின் கூடாரமானது ஊராட்சி அலுவலக கட்டிடம்
திருவாரூர் மாவட்டம் பழவனக்குடி ஊராட்சியில், ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் பராமரிப்பின்றி சேதமடைந்து காணப்படுகிறது.குறிப்பாக கட்டிடத்தின் சிமெண்டு காரைகள் பெயர்ந்து ஆபத்தான நிலையில் உள்ளன.மேலும் ஊராட்சி மன்ற கட்டிடம் பயன்பாடு இல்லாமல் இருப்பதால் கால்நடைகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. இந்த நிலையில் அருகில் உள்ள இ-சேவை மையத்தில் தற்காலிகமாக ஊராட்சி மன்ற அலுவலகம் இயங்கி வருகிறது.இதனால் இ-சேவைகளை பெறுவதில் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர்.எனவே பொதுமக்களின் நலன் கருதி சேதமடைந்து காணப்படும் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பழவனக்குடி.
Related Tags :
Next Story