ரூ.15169 கோடி கடன் வழங்க இலக்கு
திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கு ரூ.15,169 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 2022-23-ம் ஆண்டுக்கு ரூ.15,169 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரூ.15,169 கோடி கடன்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. நபார்டு வங்கியின் மாவட்ட திட்ட ஆவணத்தை கலெக்டர் வினீத் வெளியிட, முதல் பிரதியை மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் பெற்றுக்கொண்டார்.
தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியால் தயாரிக்கப்பட்ட 2022-23-ம் ஆண்டுக்கான மாவட்டத்தின் வங்கிகளுக்கான வருடாந்திர கடன் இலக்கு ரூ.15 ஆயிரத்து 168 கோடியே 95 லட்சம் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 10 சதவீதம் அதிகம் ஆகும்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
இந்த திட்ட ஆவணம் முன்னுரிமை துறைகள், அரசின் கொள்கைகள், திட்டங்கள், கிடைக்கக்கூடிய கிராமப்புற உள்கட்டமைப்பு வசதிகள், வங்கியாளர்கள் மற்றும் இதர துறைகளின் ஆலோசனை செயல்முறைகள் குறித்து ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. மொத்த கடன் திட்டமான ரூ.15 ஆயிரத்து 168 கோடியே 95 லட்சத்தில், விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளுக்கு ரூ.4 ஆயிரத்து 560 கோடியே 16 லட்சம், சிறு, குறு, நடுத்தர தொழில்துறைக்கு ரூ.7 ஆயிரத்து 898 கோடியே 22 லட்சமும், ஏற்றுமதி கடனாக ரூ.645 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கல்விக்கடன்
மேலும் கல்விக்கடனாக ரூ.328 கோடியே 95 லட்சமும், வீட்டுவசதிக்கு ரூ.357 கோடியே 75 லட்சமும், புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு ரூ.581 கோடியே 64 லட்சமும், மகளிர் சுய உதவிக்குழுக்கள், கூட்டு பொறுப்புக்குழுக்கள் உள்ளிட்டவைக்கு ரூ.775 கோடியும், சமூக உள்கட்டமைப்புக்கு ரூ.22 கோடியே 23 லட்சமும் திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் ராஜூ, வங்கிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story