சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது


சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 25 Oct 2021 11:49 PM IST (Updated: 25 Oct 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தாராபுரம்
தாராபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுமி
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை சேர்ந்த மகாராஜன் மகன் சுதர்சன் (வயது 19) கூலித் தொழிலாளி. சுதர்சன் ஒரு 16 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். இந்த விபரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சிறுமியை அழைத்துக்கொண்டு அவருடைய பெற்றோர் தாராபுரத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த ஆகஸ்டு மாதம்  30-ந் தேதி முதல் சிறுமியை  திடீரென காணவில்லை. இது குறித்து சிறுமியின் தாயார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி, சுதர்சனுடன்  திருச்செந்தூரில் இருப்பது தெரியவந்தது. இதை அறிந்த மகளிர் போலீசார் திருச்செந்தூர் சென்று அவர்களை திருப்பூர் அழைத்து வந்து அந்த சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். 
கைது 
இந்த நிலையில் மீண்டும் கடந்த 15-ந் தேதி அந்தச் சிறுமி திடீரென காணவில்லை. இதுகுறித்து சிறுமியின் தாயார்  தாராபுரம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அப்போது  அந்த சிறுமி சுதர்சனுடன் இருப்பது தெரியவந்தது. பின்னர்  இருவரையும் அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது சிறுமிக்கு சுதர்சன் பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து  சுதர்சனை போக்சோ சட்டத்தின் கீழ்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story