துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்


துப்புரவு பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 25 Oct 2021 11:57 PM IST (Updated: 25 Oct 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

திருத்தங்கல் நகராட்சியில் பணியாற்றிய 200 துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இன்னும் வழங்காத நிலையில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

சிவகாசி, 
திருத்தங்கல் நகராட்சியில் பணியாற்றிய 200 துப்புரவு பணியாளர்களுக்கு கடந்த மாதம் சம்பளம் இன்னும் வழங்காத நிலையில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
திருத்தங்கல்
திருத்தங்கல் நகராட்சி கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிவகாசி நகராட்சியுடன் இணைக்கப்பட்டு சிவகாசி  மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 153 தனியார் தூய்மை பணியாளர்களும், டெங்கு ஒழிப்பு பணியில் 55 பேரும் பணியாற்றி உள்ளனர். இவர்கள் கடந்த மாதம் பணியாற்றியதற்கான சம்பளம் இந்த மாதம் 10-ந்தேதிக்குள் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் தற்போது வரை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
திருத்தங்கல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 88 தெருக்கள் உள்ள நிலையில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் என 31 பேர் மட்டும் தான் இருக்கிறார்கள். இதில் 16 பேர் இதர பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறார்கள். இதனால் துப்புரவு பணிக்கு 15 பேர் மட்டுமே உள்ள நிலை இருந்தது. இதை தொடர்ந்து நகரில் சுகாதார பணியில் பிரச்சினை ஏற்படாமல் இருக்க நகராட்சி நிர்வாகம் சார்பில் தனியார் தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். 
முற்றுகை போராட்டம்
இவர்களுக்கு தினமும் ரூ.208 சம்பளம் வழங்கப்படும் என உறுதி கூறப்பட்டது. அதேபோல் டெங்கு நோய் பரவலை தடுக்கவும், கொரோனா தடுப்பு பணிகளை செய்யவும் 55 பேர் நியமிக்கப்பட்டனர். இவர்களுக்கு தினமும் ரூ.385 சம்பளம் தர முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
திருத்தங்கல் நகராட்சி பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்ட சுமார் 200 பேருக்கு ஒரு மாத சம்பளமாக ரூ.20 லட்சம் வரை வழங்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பள பணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திருத்தங்கல் நகராட்சி நிர்வாகம் சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதால் சம்பளம் கிடைக்குமா? என்ற அச்சம் தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனை தொடர்ந்து 200-க்கும் மேற்பட்டவர்கள் திருத்தங்கல் நகராட்சி அலுவலகத்தை நேற்று காலை முற்றுகையிட்டனர். துப்புரவு பணியாளர்கள் பணிக்கு செல்லாததால் பல இடங்களில் குப்பைகள் அகற்றும் பணி பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருத்தங்கல் நகராட்சியின் கமிஷனர் பதவி வகித்து வந்த ரவிச்சந்திரன், சுகாதார அதிகாரி கந்தசாமி மற்றும் அதிகாரிகள் துப்புரவு பணியாளர்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்தவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 
அப்போது ஒரு வாரத்திற்குள் சம்பள பணம் முழுவதும் பெற்றுதர ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டது. இதை தொடர்ந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்ற னர்.

Next Story