சேதுபாவாசத்திரம் அருகே மின்னல் தாக்கி மீனவர் சாவு நடுக்கடலில் மீன்பிடித்தபோது பரிதாபம்


சேதுபாவாசத்திரம் அருகே மின்னல் தாக்கி மீனவர் சாவு நடுக்கடலில் மீன்பிடித்தபோது பரிதாபம்
x
தினத்தந்தி 25 Oct 2021 7:28 PM GMT (Updated: 25 Oct 2021 7:28 PM GMT)

சேதுபாவாசத்திரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

சேதுபாவாசத்திரம்:-

சேதுபாவாசத்திரம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் மீனவர் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

மீன்பிடித்தனர்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கார்த்திகேயன் என்பவர் தனக்கு சொந்தமான பைபர் படகில் அகமத் மைதீன், சந்திரன், மல்லிப்பட்டினம் கே.ஆர்.காலனியை சேர்ந்த பெரியய்யா மகன் கருப்பையா(வயது 37) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
இவர்கள் அனைவரும் மல்லிப்பட்டினத்தில் இருந்து கிழக்கே 5 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

மின்னல் தாக்கி சாவு

இரவு 1 மணி அளவில் இடி-மின்னலுடன் மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் பைபர் படகை இயக்கி கொண்டிருந்த கருப்பையா சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக பலியானார்.
மற்ற மீனவர்கள் 3 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அவர்கள் கருப்பையா உடலை நேற்று அதிகாலை 4 மணி அளவில் மல்லிப்பட்டினம் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர்.

உடல் ஒப்படைப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த சேதுபாவாசத்திரம் கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், மீனவர் கருப்பையாவின் உடலை கைப்பற்றி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். பிரேத பரிசோதனை முடிந்து உடல் நேற்று மதியம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இறந்து போன கருப்பையாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வயதான தாயாரை அவர்தான் பராமரித்து வந்துள்ளார்.

நிவாரணம் வழங்க கோரிக்கை

இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவைமாநில பொதுச் செயலாளர் தாஜூதீன் கூறுகையில், ‘மீனவர்கள் இயற்கையை எதிர்கொண்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில், நடந்த சம்பவத்தில் மின்னல் தாக்கி கருப்பையா உயிரிழந்துள்ளார். அவருடைய குடும்பத்தாருக்கு தமிழக அரசு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்’ என்றார்.

Next Story