லாரி மோதி மாற்றுத்திறனாளி பலி; பொதுமக்கள் சாலை மறியல்
லாரி மோதி மாற்றுத்திறனாளி இறந்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வி.கைகாட்டி:
மனு அளிக்க சென்றார்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் குழந்தைவேலு(வயது 60). மாற்றுத்திறனாளியான இவர், தனது கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க நேற்று காலை வந்தார். வி.கைகாட்டி அருகே உள்ள விளாங்குடி பிரிவு பாதையில் வந்தபோது, தா.பழூரில் இருந்து அரியலூருக்கு வந்த லாரியை வளைவில் திருப்ப முடியாததால், டிரைவர் லாரியை பின்னோக்கி இயக்கியுள்ளார்.
அப்போது பின்னால் நின்ற குழந்தைவேலின் ஸ்கூட்டர் மீது லாரி மோதியது. இதில் கீழே விழுந்த குழந்தைவேலு மீது லாரியின் சக்கரம் ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சாலை மறியல்
இதைக்கண்ட அப்பகுதி மக்கள் விளாங்குடி பிரிவு தா.பழூர் சாலையில் கனரக வாகனங்களை இயக்கக்கூடாது, இறந்த குழந்தைவேல் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த அரியலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் மற்றும் கயர்லாபாத் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களின் கோரிக்கை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையடுத்து குழந்தைவேலின் உடலை கைப்பற்றி அரியலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த கயர்லாபாத் போலீசார், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறியலால் திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story