2 பெண்களிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
உவரி, திசையன்விளை பகுதியில் 2 பெண்களிடம் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
உவரி, திசையன்விளை பகுதியில் 2 பெண்களிடம் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 16 பவுன் நகைகள் மீட்கப்பட்டன.
சங்கிலி பறிப்பு
உவரி அருகே உள்ள கரைசுத்துபுதூரை சேர்ந்தவர் ஐசக் தனராஜ் மனைவி லீலா வசந்தகுமாரி. ஓய்வு பெற்ற ஆசிரியை. திசையன்விளை அருகே உள்ள மன்னார்புரத்தை சேர்ந்தவர் சிலுவை சவரிமுத்து மனைவி பெப்பின். ஆசிரியை. இவர்கள் இருவரும் கடந்த 13-ந் தேதி சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் அவர்கள் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலிகளை பறித்துச் சென்று விட்டனர். இதுகுறித்து உவரி, திசையன்விளை போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப்பட்டது.
அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், வள்ளியூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு சமய்சிங் மீனா ஆகியோர் மேற்பார்வையில் உவரி இன்ஸ்பெக்டர் செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா மற்றும் போலீசார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
வாலிபர் கைது
இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் துப்பாஸ் பட்டியை சேர்ந்த மரகத வேல் மகன் சண்முகவேல் (எ) சம்மு குட்டி (வயது 23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கரைசுத்துபுதூரில் பறித்து சென்ற 13 பவுன் நகை, மன்னார்புரத்தில் பறித்து சென்ற 3 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய அவரது நண்பர்களான வல்லநாடு சக்திவேல், முத்துகுமார் ஆகியோர் ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு சாத்தான்குளம் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
Related Tags :
Next Story