தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் வார்டு வரையறை பணி தீவிரம்- மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தகவல்


தரம் உயர்த்தப்பட்ட நகராட்சிகளில் வார்டு வரையறை பணி தீவிரம்- மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தகவல்
x
தினத்தந்தி 26 Oct 2021 2:04 AM IST (Updated: 26 Oct 2021 2:04 AM IST)
t-max-icont-min-icon

தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி பகுதிகளில் வார்டு வரையறை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நெல்லையில் நடந்த 4 மாவட்ட கலெக்டர்-அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.

நெல்லை:
தரம் உயர்த்தப்பட்ட நகராட்சி பகுதிகளில் வார்டு வரையறை செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று நெல்லையில் நடந்த 4 மாவட்ட கலெக்டர்-அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தெரிவித்தார்.

ஆய்வு கூட்டம்

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்ேபாது அவர் கூறியதாவது:-

விதிமுறைகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பாதுகாப்புடனும், நடுநிலையுடனும் நடத்த வேண்டும். தேர்தலில் பணியாற்றும் அனைத்து அலுவலர்களும் தேர்தல் குறித்த முழு விவரங்களையும் அறிந்திருக்க வேண்டும். தேர்தலை பொறுத்தவரை வாக்காளர் பட்டியல், வாக்குச்சாவடி பட்டியல் தயாரித்தல், தேர்தல் கண்காணிப்பு பணிகள், தேர்தல் நடத்தை விதிகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட தேர்தல் குறித்த முக்கிய பணிகளை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். 
ஆய்வு கூட்டத்திற்கு வந்துள்ள 4 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக பயிற்சி எடுத்து தேர்தல் விதிமுறைகளை அறிந்து பணியாற்ற வேண்டும். தேர்தல் பணிகள் குறித்து தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். 

வார்டு வரையறை பணி

நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. களக்காடு பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு வார்டு வரையறை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதேபோல் தென்காசி மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. சுரண்டை பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வார்டு வரையறை பணிகள் நடந்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 2 நகராட்சிகள், 18 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடந்து வருகிறது. திருச்செந்தூர் பேரூராட்சி தரம் உயர்த்தப்பட்டு நகராட்சியாக அறிவிக்கப்பட்டதால், அங்கு வார்டு வரையறை பணிகள் நடந்து வருகின்றது.
இதேபோல் கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் பணிகள் நடந்து வருகிறது. ஆளூர், தென்கம்புதூர் பேரூராட்சிகள் நாகர்கோவில் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, வார்டு வரையறை பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டர்கள்-அதிகாரிகள்

கூட்டத்தில் கலெக்டர்கள் விஷ்ணு (நெல்லை), கோபால சுந்தரராஜ் (தென்காசி), செந்தில்ராஜ் (தூத்துக்குடி), அரவிந்த் (கன்னியாகுமரி), நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர்கள் விஷ்ணு சந்திரன் (நெல்லை), சாருஸ்ரீ (தூத்துக்குடி), மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் மணிவண்ணன் (நெல்லை), கிருஷ்ணராஜ் (தென்காசி), ஜெயக்குமார் (தூத்துக்குடி), பத்ரிநாராயணன் (கன்னியாகுமரி), தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய முதன்மை தேர்தல் அலுவலர்கள்அருள்மணி (ஊராட்சிகள்), தனலட்சுமி (நகராட்சிகள்), தேர்தல் உதவி ஆணையர் சம்பத்குமார், நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் விஜயலட்சுமி, பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் குத்தாலிங்கம் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story