6 பேரை பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வைத்த பெங்களூரு பல் டாக்டர் கைது - என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி
6 வாலிபர்களை பயங்கரவாத அமைப்புக்கு அனுப்பி வைத்த வழக்கில் பெங்களூருவை சேர்ந்த பல் டாக்டரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து உள்ளனர்.
பெங்களூரு:
மூளைச்சலவை
இந்தியாவில் வசித்து வரும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து அவர்களை சிரியாவுக்கு அனுப்பி வைத்து, பயங்கரவாதிகளாக மாற்றும் கும்பலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 2013-14-ம் ஆண்டில் பெங்களூருவை சேர்ந்த 6 வாலிபர்களை சிலர் மூளைச்சலவை செய்து அவர்களை சிரியாவுக்கு அனுப்பி வைத்து இருந்தனர். இதுகுறித்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த வழக்கில் தொடர்புடையதாக பெங்களூரு திலக் நகரை சேர்ந்த சுகாப் ஹமீது என்கிற ஷகீல் முன்னா மற்றும் அரிசி வியாபாரியான பிரேசர் டவுனை சேர்ந்த இர்பான் நசீர் என்கிற இப்ரி ஆகியோரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து இருந்தனர்.
பல் டாக்டர் கைது
அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரு குரப்பனபாளையாவில் வசித்து வரும் பல் டாக்டரான முகமது தாகீர் மக்மூத் என்பவருக்கும் 6 வாலிபர்களை சிரியாவுக்கு அனுப்பி வைத்ததில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் குரப்பனபாளையா அருகே பிஸ்மில்லா காலனியில் வசித்து வந்த முகமது தாகீர் மக்மூத் என்பவரை நேற்று முன்தினம் கைது செய்து உள்ளனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டியதும், வாலிபர்களை மூளைச்சலவை செய்து சிரியாவுக்கு அனுப்பி வைத்ததும் தெரியவந்து உள்ளது. கைதான முகமதுவிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story