பெலகாவி விமான நிலையத்தில் மாற்று ஓடுபாதையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு
பெலகாவி விமான நிலையத்தில் மாற்று ஓடுபாதையில் தரையிறங்கிய விமானத்தால் பரபரப்பு உண்டானது. இதுதொடர்பான விமானிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெலகாவி:
ஐதராபாத்-பெலகாவி விமானம்
வடகர்நாடக மாவட்டமான பெலகாவியில் சாம்ரா விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்தில் இருந்து உள்நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் நேற்று முன்தினம் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பெலகாவி சாம்ரா விமான நிலையத்திற்கு ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தை விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை 26-ல் தரையிறக்க விமான நிலைய அதிகாரிகள் அனுமதி அளித்து இருந்தனர்.
ஆனால் அந்த விமானத்தை விமானிகள் விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதை 8-ல் மாற்றி தரையிறக்கினர். அதுவும் அந்த விமானம் ஓடுபாதையின் முடிவில் போய் தான் நின்றது. இதனால் விமான நிலைய அதிகாரிகள் பதற்றமும், பரபரப்பும் அடைந்தனர். உடனடியாக அந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் இறக்கப்பட்டனர். இதன்பின்னர் விமானத்தை மாற்றி இறக்கியது குறித்து அந்த விமானத்தை இயக்கிய விமானிகளிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை குழுவுக்கு தகவல்
இதுகுறித்து பெலகாவி விமான நிலைய அதிகாரி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-
ஐதராபாத்தில் இருந்து வந்த விமானத்தை ஓடுபாதை 26-ல் தரையிறக்க அனுமதி அளித்தோம். ஆனால் அந்த விமானத்தை ஓடுபாதை 8-ல் விமானிகள் மாற்றி தரையிறக்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் இதுகுறித்து விமான போக்குவரத்து அமைச்சகம், விமான விபத்து விசாரணை குழுவுக்கு தகவல் கொடுத்து உள்ளோம். அந்த விமானத்தை இயக்கிய விமானிகளிடம் விசாரணையும் நடந்து வருகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு மங்களூரு விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஓடுபாதையை விட்டு விலகி ஓடி தடுப்பு சுவரை இடிந்து கொண்டு வெளியே பாய்ந்து தீப்பிடித்ததில் 150 பயணிகள் உடல்கருகி இறந்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story