பெங்களூருவில் ஜாமீனில் வெளிவந்த ரவுடி படுகொலை


பெங்களூருவில் ஜாமீனில் வெளிவந்த ரவுடி படுகொலை
x
தினத்தந்தி 26 Oct 2021 2:31 AM IST (Updated: 26 Oct 2021 2:31 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் ஆயுதங்களால் தாக்கி ஜாமீனில் வெளிவந்த ரவுடி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இது பழிக்கு, பழியாக நடந்ததா? போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூரு:

ரவுடி ஆனந்த்

  பெங்களூரு பீனியா அருகே நீகதாரனஹள்ளி சிவபுரா பகுதியில் வசித்து வந்தவர் ஆனந்த். ரவுடியான இவர் மீது பீனியா போலீஸ் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கடத்தல் உள்ளிட்ட வழக்குகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஆனந்த் பா.ஜனதா கட்சியில் இணைந்தார். இதற்கிடையே ஒரு கடத்தல் வழக்கில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.

  இந்த வழக்கில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தான் ஆனந்த் ஜாமீனில் வெளியே வந்து இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை ஆனந்த் டி.வி.யில் பார்த்து கொண்டு இருந்தார். அப்போது அவரது செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதை எடுத்து பேசியபடி அவர் வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார்.

ஆயுதங்களால் தாக்கி கொலை

  இந்த சந்தர்ப்பத்தில் அங்கு மறைந்து இருந்த மர்மகும்பல் திடீரென ஆனந்தை சூழ்ந்து கொண்டு அவரை அரிவாள், கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியது. இதில் பலத்த வெட்டு காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்தார். பின்னர் மர்மகும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.

  இந்த கொலை சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் பீனியா போலீசார் அங்கு சென்று ஆனந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். ஆனால் ஆனந்தை கொலை செய்தது யார்? என்ன காரணத்திற்காக கொலை நடந்தது? என்பது தெரியவில்லை. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனதாதளம் (எஸ்) பிரமுகர் கொலையில் ஆனந்தை போலீசார் கைது செய்து இருந்தனர். அந்த கொலைக்கு பழிக்கு, பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்றும் போலீசார் கருதுகிறார்கள். இந்த கொலை சம்பவம் பற்றி பீனியா போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடிவருகின்றனர்.

Next Story