தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
கீழ்குளம் வில்லாரிவிளையில் இருந்து பொத்தியான்விளை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் இரு புறமும் முட்செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பு அகற்றப்படுமா?
-ஆல்பர்ட் ராஜ் வில்லாரிவிளை.
பஸ் இயக்கப்படுமா
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் இருந்து ஆசாரிபள்ளம் வழியாக ராஜாக்கமங்கலத்திற்கு தடம் எண் 38 எப் என்ற அரசு பஸ் தினமும் 9 முறை இயங்கி வந்தது. இந்த பஸ்சால் அனந்தநாடார் குடியிருப்பு, பருத்திவிளை, ஆடராவிளை, வைராகுடியிருப்பு, தர்மபுரம், ராஜாக்கமங்கலம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், நோயாளிகள் பயன்பெற்று வந்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பஸ் இயக்கப்படவில்லை. இதனால், கிராம பகுதியில் உள்ள நோயாளிகள் ஆசாரிபள்ளத்துக்கு செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். பள்ளி-கல்லூரி மாணவர்களும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே, சம்பந்தபட்ட அதிகாரிகள் மீண்டும் பஸ்சை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஆர்.அமுதராஜன், ஆடராவிளை.
மின்கம்பத்தை மாற்ற வேண்டும்
ராஜாக்கமங்கலம் மேலத்தெருவில் சாலையோரம் கழிவுநீர் ஓடை உள்ளது. இந்த தெருவில் மின்கம்பத்தை கழிவுநீர் ஓடையின் நடுவே அமைத்துள்ளனர். இதனால், ஓடையில் கழிவுநீர் வடிந்தோட முடியாமல் தேங்கி நிற்பதால், அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அந்த பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் ஓடையில் உள்ள மின்கம்பத்தை அகற்றி சாலையோரம் நடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.குழந்தைவேலு, ராஜாக்கமங்கலம்.
பெயர் பலகை வைக்க வேண்டும்
வழுக்கம்பாறையில் இருந்து கன்னியாகுமரிக்கு நாற்கர சாலை செல்கிறது. இந்த சாலையில் இருந்து குலசேகரபுரம், தாமரைகுளம், மயிலாடி, அஞ்சுகிராமம் என பல கிராமங்களுக்கு சாலைகள் பிரிந்து செல்கிறது. ஆனால், அந்த பகுதியில் பெயர் பலகைகள் அமைக்கப்படவில்லை. இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி ஊர் பெயர் பலகை வைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கே.அனந்தநாராயணன், மருங்கூர்.
சுகாதார சீர்கேடு
வடசேரி புதுக்குடியிருப்பு பகுதியில் படிப்பகமும், அதன் எதிரே ஒரு தெருவும் உள்ளது. இந்த தெருவின் முகப்பு பகுதியில் உள்ள காலி இடத்தில் சிலர் குப்பைகளை கொட்டி தீவைக்கின்றனர். இதனால், அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குப்பைகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மனாசே, புதுக்குடியிருப்பு.
வாகன ஓட்டிகள் அவதி
தேங்காப்பட்டணம் சந்திப்பில் இருந்து கருங்கல் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தேங்காப்பட்டணம் சந்திப்பில் இருந்து சிறிது தூரத்தில் மழைநீர் தேங்கி காணப்படுகிறது. சாலையில் வடிகால் ஓடை இல்லாததால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, அதிகாரிகள் வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஸ்ரீராம், ஆசாரிபள்ளம்.
நோய் பரவும் அபாயம்
மேல புத்தேரி பாரத் நகர் முதல் தெரு அருகில் ஒரு காலிமனை உள்ளது. தற்போது பெய்த மழையால் அந்த இடத்தில் தண்ணீர் தேங்கி குளம்போல் காட்சி அளிக்கிறது. தண்ணீர் மாசடைந்து துர்நாற்றம் வீசுவதுடன், கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
-சுப்பிரமணியம். மேலபுத்தேரி.
விபத்து அபாயம்
நாகர்கோவில் ஸ்டேட் பாங்க் காலனியில் இருந்து டெரிக் சந்திப்பு செல்லும் சாலை உள்ளது. தற்போது, பெய்த மழையால் இந்த சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜெயராம், ராமவர்மபுரம்.
Related Tags :
Next Story