கடந்த 6 மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பு - அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சிங்காரச் சென்னை 2.O திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதத்தில் மட்டும் 87 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னை,
சென்னையில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டு சிறப்பாக பராமரித்து வரும் குடியிருப்பு நலச்சங்கங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை பாராட்டி நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ரிப்பன் மாளிகையில் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் பூங்காக்கள், போக்குவரத்து தீவுத் திட்டுகள், சாலை மையத்தடுப்புகள் மற்றும் கட்டிடங்களின் சுற்றுச்சுவர்களில் வண்ண ஓவியங்கள் வரைந்து அழகுப்படுத்தும் பணிகளை சிறப்பாக செயல்படுத்திய மண்டலங்களுக்கான பாராட்டு சான்றிதழ்களையும் அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.
அதைதொடர்ந்து ரிப்பன் மாளிகை கட்டிட வளாகத்தில் கே.என்.நேரு மரக்கன்றுகளை நட்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
சென்னை மாநகரில் புயல் மற்றும் இயற்கை சீற்றங்களை தாங்கக்கூடிய வகையிலும், நீண்ட நாட்களுக்கு பயனுள்ளதாகவும், அனைத்து மண்டலங்களிலும் மண்ணின் தன்மை, கிடைக்கும் தண்ணீரின் தரம், அளவு, சாலைகள் மற்றும் தெருக்களின் அகலத்துக்கு ஏற்றார்போல் பாரம்பரிய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணிகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலைகள், தெருக்கள் மற்றும் பூங்காக்களில் மரக்கன்றுகளை நட்டு தொடர்ந்து பராமரிப்பது தொடர்பாக தன்னார்வ அமைப்பினர், குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் பிற அமைப்பினர் ஆகியோரை இணைத்து பசுமை பேரியக்கமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் கடந்த மே மாதம் 7-ந்தேதி முதல் அக்டோபர் 23-ந்தேதி வரையிலான கடந்த 6 மாதத்தில் மட்டும் 87 ஆயிரத்து 4 மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, துணை கமிஷனர்கள் எம்.எஸ்.பிரசாந்த், டாக்டர் எஸ்.மனிஷ், சிம்ரன்ஜீத் சிங் காஹ்லோன், சரண்யா அரி, எம்.சிவகுரு பிரபாகரன் உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story