சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேர் கைது
திருவள்ளூர் மாவட்டத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி உட்கோட்டம் சோழவரம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட விஜயநல்லூர் பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வடக்கு மண்டல காவல்துறை தலைவர் சந்தோஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சிறப்பு படையினர் அங்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.
போலீசார் மேற்கொண்ட சோதனையில் சோழவரம் விஜய நல்லூர் கிராமத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பாடியநல்லூர் மருதபாண்டி நகரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான இடத்தில் தகடுகளால் தடுப்புகள் அமைத்து அதன் உள்ளே ஒரு கன்டெய்னரில் 24 வயது இளைஞர் முதல் 65 வயது முதியவர் வரை என 21 பேர் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து போலீசார் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை சுற்றி வளைத்து கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து ரூ.51 ஆயிரத்து 250 மற்றும் 2 கார்கள், 10 மோட்டார் சைக்கிள்களை கைப்பற்றினார்கள்.
Related Tags :
Next Story