செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயி...! ரெயில் மோதி பலி


செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயி...! ரெயில் மோதி பலி
x
தினத்தந்தி 26 Oct 2021 8:37 AM GMT (Updated: 2021-10-26T14:07:47+05:30)

திருவள்ளூர் அருகே செல்போனில் பேசியபடி சென்ற விவசாயி ரெயில் மோதி பரிதாபமாக இறந்தார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த விடையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). இவருக்கு அஞ்சலா என்ற மனைவியும், பவித்ரா (25) என்ற மகளும், பூபதி (23) என்ற மகனும் உள்ளனர்.

விவசாயியான ஏழுமலை தினந்தோறும் தனது வயலில் விளைந்த காய்கறிகளை எடுத்து கொண்டு ரெயில் மூலம் வில்லிவாக்கம் மார்க்கெட்டில் விற்பனை செய்து வருவது வழக்கம்.

நேற்று காலை 9 மணி அளவில் வழக்கம் போல அவர் காய்கறி மூட்டைகளை எடுத்து கொண்டு கடம்பத்தூர் ரெயில் நிலையத்துக்கு சென்றார்.

செல்போனில் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி வேகமாக சென்ற சரக்கு ரெயில் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். அவர் எடுத்து வந்த காய்கறி மூட்டைகள் அனைத்தும் தண்டவாளத்தில் சிதறியது. இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே செல்போன் பேசிக்கொண்டு தண்டவாளத்தை கடக்க முயன்ற விவசாயி சரக்கு ரெயில் மோதி இறந்த சம்பவம் கடம்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story