தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 979 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் இதுவரை 979 பேரிடம் ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை 979 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளதாக, ஆணைய வக்கீல் அருள்வடிவேல் சேகர் தெரிவித்தார்.
ஒருநபர் ஆணையம்
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே, நடந்த 30 கட்ட விசாரணையில் 962 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 20-ந் தேதி, 31-வது கட்ட விசாரணை தூத்துக்குடி பீச் ரோடு விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் விசாரணை அதிகாரி அருணா ஜெகதீசன் தலைமையில் தொடங்கியது. இதில் துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், துப்பாக்கிகளை பரிசோதனை செய்த தடயவியல் நிபுணர்கள், துப்பாக்கி சூடு நடத்த உத்தரவு பிறப்பித்த நிர்வாக நடுவர்களான தாசில்தார்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
979 பேரிடம் விசாரணை
இதுகுறித்து ஒருநபர் ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
31-வது கட்டமாக ஒருநபர் ஆணைய விசாரணை கடந்த 20-ந் தேதி முதல் இன்று (அதாவது நேற்று) வரை நடந்தது. இதில் 30 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அவர்களில் 17 பேர் ஆஜர் ஆனார்கள். இதுவரை மொத்தம் 1360 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. இதில் 979 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 1,223 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளன.
உயர் அதிகாரிகள்
அடுத்த கட்ட விசாரணை நவம்பர் மாதம் 16-ந் தேதி முதல் 10 நாட்கள் நடக்கிறது. இதில் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரிடம் விசாரணை நடத்த உள்ளோம். அதன்பிறகு மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, டி.ஐ.ஜி, ஐ.ஜி உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படும். முன்னாள் முதல்-அமைச்சரிடம் விசாரணை நடத்த தேவை இல்லை.
நடந்த நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள், அதனை அறிந்தவர்களிடம் மட்டும் விசாரணை நடத்தப்படுகிறது. ஆணைய விசாரணையை, அரசு நிர்ணயித்து உள்ள காலஅவகாசத்துக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story