விளாத்திகுளம் அருகே வீட்டை எழுதி தராததால் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது


விளாத்திகுளம் அருகே  வீட்டை எழுதி தராததால்  கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது
x
தினத்தந்தி 26 Oct 2021 6:01 PM IST (Updated: 26 Oct 2021 6:01 PM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே வீட்டை எழுதி தராததால் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்டார்

எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டார். 
மீனவர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தைச் சேர்ந்தவர் இனிகோ (வயது 41), மீனவர். இவருடைய மனைவி மரிய வினோ (38). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். 
கடந்த சில நாட்களாக கணவர் பெயரில் உள்ள வீட்டை தனது பெயருக்கு மாற்றி எழுதிக்கொடுக்குமாறு மரிய வினோ வற்புறுத்தி வந்தார். இதற்கு இனிகோ மறுத்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 
கொதிக்கும் வெந்நீர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வேலைக்கு சென்று விட்டு இனிகோ வீட்டிற்கு வந்தார். அப்போது, மீண்டும் மரிய வினோ வீட்டை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்கும்படி இனிகோவிடம் கேட்டார். ஆனால், அவர் மீண்டும் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த மரியவினோ அடுப்பில் போட்டு வைத்து இருந்த கொதிக்கும் வெந்நீரை எடுத்து கணவர் என்றும் பாராமல் இனிகோ மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத அவர் உடல் வெந்து அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். 
கொலை முயற்சி வழக்கில் கைது
பின்னர் இனிகோவை மீட்டு சிகிச்சைக்காக வேம்பார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து இனிகோ அளித்த புகாரின்பேரில் சூரங்குடி போலீசார், கொலை முயற்சி வழக்கில் மரியவினோவை கைது செய்தனர்.
விளாத்திகுளம் அருகே வீட்டை எழுதி தராத ஆத்திரத்தில் கணவர் மீது வெந்நீர் ஊற்றிய மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story