பூ புத்தரி நெற்கதிர் அறுவடை திருவிழா


பூ புத்தரி நெற்கதிர் அறுவடை திருவிழா
x
தினத்தந்தி 26 Oct 2021 6:45 PM IST (Updated: 26 Oct 2021 6:45 PM IST)
t-max-icont-min-icon

பூ புத்தரி நெற்கதிர் அறுவடை திருவிழா

கூடலூர்

கூடலூரில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து குலதெய்வக் கோவில்களில் படையலிட்டு ஆதிவாசி மக்கள் பூ புத்தரி எனும் நெற்கதிர் அறுவடை திருவிழாவை கொண்டாடி வழிபட்டனர்.

‘பூ புத்தரி’ நெற்கதிர் திருவிழா

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் பனியர், குறும்பர் ஆதிவாசி மக்கள் கணிசமாக வாழ்ந்து வருகின்றனர். மேலும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினரும் வசித்து வருகின்றனர். பல தலைமுறைகள் கடந்தாலும் ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் தங்களது பாரம்பரிய கலாசார பழக்க வழக்கங்கள், பண்டிகைகளை இன்று வரை கொண்டாடி வருகின்றனர். மலைப்பிரதேசமாக இருந்தாலும் கூடலூரில் பாரம்பரிய நெல் விவசாயத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

மே மாத இறுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் சமயத்தில் நெல் நடவு செய்யும் பணியில் ஆதிவாசி மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் மும்முரமாக ஈடுபடுகின்றனர். பின்னர் தொடர் பராமரிப்பு பணி மேற்கொள்கின்றனர். இறுதியாக ஐப்பசி மாதம் 10-ம் தேதி வயல்களில் விளைந்த நெற்கதிர்களை அறுவடை செய்து தங்களது குலதெய்வக் கோவில்களில் படையலிட்டு ஆதிவாசி மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வழிபாடு நடத்துகின்றனர்.

அறுவடைத் திருவிழா

இந்த நெல் அறுவடையை பூ புத்தரி திருவிழா என அழைக்கப்படுகிறது. நேற்று கூடலூர் புத்தூர்வயல் பகுதியில் பூ புத்தரி திருவிழா கொண்டாடப்பட்டது. காலை 8.30 மணிக்கு ஆதிவாசி மக்கள் தங்களது பாரம்பரிய இசைக்கருவிகளை முழங்கியவாறு வயலில் விளக்கேற்றி தேங்காய் பழங்கள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து நெற்கதிர்களை அறுவடை செய்து சிறு கட்டுகளாக கட்டினர். பின்னர் அங்கிருந்து தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக புத்தூர் கவலை பகுதியிலுள்ள குலதெய்வ கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க ஆதிவாசி மக்கள் மற்றும் மவுண்டாடன் செட்டி சமூகத்தினர் வந்தனர்.

அங்கு நெற்கதிர்கள் கட்டுகளை பிரித்து புத்தூர்வயல் மகாவிஷ்ணு, மங்குழி பகவதி அம்மன், நம்பாலக்கோட்டை வேட்டைக்கார சிவன் உள்ளிட்ட கோவில்களுக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து குலதெய்வ கோவிலில் நெற்கதிர்களை படையலிட்டு ஆதிவாசி மக்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் பாரம்பரிய நடனம் ஆடி மகிழ்ந்தனர். இதேபோல் நம்பாலகோட்டை வேட்டைக்கார சிவன் உள்ளிட்ட கோவில்களில் நெற்கதிர்கள் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு நெற்கதிர்கள் பிரசாதமாக வழங்கப்பட்டது.



Next Story