அரசு மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நடத்த இடைக்கால ஏற்பாடு


அரசு மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நடத்த இடைக்கால ஏற்பாடு
x
தினத்தந்தி 26 Oct 2021 6:46 PM IST (Updated: 26 Oct 2021 6:46 PM IST)
t-max-icont-min-icon

அரசு மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நடத்த இடைக்கால ஏற்பாடு

ஊட்டி

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் அரசு மருத்துவக் கல்லூரி வகுப்புகள் நடத்த இடைக்கால ஏற்பாடாக தயார் செய்யப்பட்டு உள்ளது. அதற்கான அறைகளும் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மருத்துவ கல்லூரி

நீலகிரி மாவட்டம் ஊட்டி எச்.பி.எப். பகுதியில் ரூ.447.32 கோடி மதிப்பில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கல்லூரி வளாகம், குடியிருப்புகள், மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் கூடிய பல்வேறு பிரிவுகள், வாகன நிறுத்துமிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மலைப்பிரதேசம் என்பதால் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் கட்டுமான பணி சற்று மந்தமாக நடந்து வருகிறது. 2021-2022-ம் கல்வியாண்டில் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 150 மாணவர்களை சேர்த்து கல்லூரி விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதைத் தொடர்ந்து கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. முதல்கட்டமாக உடலியல், உடல் இயங்கியல், உயிர்வேதியியல் ஆகிய 3 பிரிவு கட்டிடங்களை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மத்திய அரசு அனுமதி பெற்று நடப்பாண்டில் மாணவர் சேர்க்கையுடன் கல்லூரி தொடங்க இடைக்கால ஏற்பாடாக பிற கட்டிடங்களில் வகுப்புகள் நடத்த அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதன்பேரில் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மைய முதல் மற்றும் 2-வது தளத்தில் மருத்துவக் கல்லூரி தற்காலிகமாக செயல்பட உள்ளது.

வகுப்புகள் தயார்

அங்கு கல்லூரி டீன், நிர்வாக அலுவலகம், உடலியல், உடல் இயங்கியல், உயிர்வேதியியல் ஆகிய 3 பிரிவுகளில் முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை மற்றும் மாணவர்கள் படிக்க வசதியாக இருக்கைகள் போடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு அறையிலும் எந்த பிரிவு என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கிறது. செயல்முறை விளக்கத்திற்கு தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. கணினி பொருத்தப்பட்டு, ஸ்ட்ரெச்சர்கள் போடப்பட்டு இருக்கிறது. 
இதுகுறித்து ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் மனோகரி கூறும்போது,நடப்பாண்டில் 150 மாணவர் சேர்க்கையுடன் கல்லூரி தொடங்க இருப்பதால் தற்காலிகமாக இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மத்திய, மாநில அரசுகள் அறிவித்த பின்னர் கவுன்சிலிங் மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு மாதம் வகுப்புகள் நடக்கும். 3 பிரிவுகள் இங்கு செயல்பட உள்ளது. இதனால் அனைத்து ஏற்பாடுகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கிறது என்றார்.

Next Story