கோவில்பட்டியில் ரெயில்வே பால பணிக்கான இரும்பு ஷட்டர்கள் திருட்டு 4 பேர் கைது-வேன் பறிமுதல்
ரெயில்வே பால பணிக்கான இரும்பு ஷட்டர்கள் திருட்டு
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் ரெயில்வே பாலப்பணிக்கான இரும்பு ஷட்டர்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். திருட்டுக்கு பயன்படுத்திய வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ரெயில்வே பாலம் பணி
கோவில்பட்டி அடுத்துள்ள இலுப்பையூரணி ரெயில்வே பாலம் விரிவாக்கப் பணி நடந்து வருகிறது. இந்த காங்கிரீட் பணிக்கு பயன்படுத்திய இரும்பு ஷட்டர்கள் அந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் இரவு அங்கு மினிவேனில் வந்த 4 மர்ம நபர்கள் இரும்பு ஷட்டர்களை திருடி, வேனில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டனர்.
4 பேர் சிக்கினர்
இதைப் பார்த்த ஒப்பந்ததாரரான விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரத்தை சேர்ந்த கந்தசாமி மகன் கண்ணன் மற்றும் ஊழியர்கள் வேனை மறித்து, அதில் வந்த 4 மர்ம நபர்களை பிடித்து கோவில்பட்டி கிழக்கு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கிழக்கு போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் காந்தி, கனகசுந்தரம், போலீசார் செல்லத் துரை, சுரேஷ் ஆகியோர் 4 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில், அவர்கள் வானரமுட்டி கிராமம் காந்தாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் ஆறுமுகசாமி (வயது 40), கட்டாலங் குளம் மாடசாமி மகன் காளிராஜ் ( 29), இதே ஊரைச் சேர்ந்த செல்லையா மகன் செல்லிமுத்து (57), வானரமுட்டி செல்லத்துரை மகன் முத்து சாமி (38) என்பது தெரிய வந்தது. கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து, வேனையும், அதில் இருந்த இரும்பு ஷட்டர்களையும் பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story