கொல்லிமலையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் பிடிபட்டனர்-ரூ.50 ஆயிரம் அபராதம்
கொல்லிமலையில் சந்தன மரத்தை வெட்டி கடத்திய 2 பேர் வனத்துறையினரிடம் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
சேந்தமங்கலம்:
சந்தன மரம் வெட்டி கடத்தல்
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தலமான கொல்லிமலையில் அரிய வகை மூலிகைகள் மட்டுமல்லாது சந்தன மரம் உள்பட விலை உயர்ந்த அரியவகை மரங்களும் காணப்படுகின்றன. இவற்றை சிலர் வெட்டி கடத்துவது போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் நேற்று கொல்லிமலை அடிவாரத்தில் உள்ள காரவள்ளி வனத்துறை சோதனைச்சாவடியில் வனத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக 2 பேர் ஒரு சாக்கு மூட்டையுடன் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து, சாக்கு மூட்டையில் சோதனை செய்தனர்.
அபராதம்
அப்போது அதில், சந்தன மரக்கட்டைகள் துண்டு, துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதையடுத்து அவர்களிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தேவனூர்நாடு ஊராட்சியை சேர்ந்த பரமசிவம், சூழவந்திபட்டியை சேர்ந்த கனகதுரை என்பதும், வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்தி வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர்களிடம் இருந்து 3 கிலோ 600 கிராம் எடை கொண்ட சந்தன மர துண்டுகள், அரிவாள், உளி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர்களுக்கு மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தார்.
Related Tags :
Next Story