கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா விழுப்புரத்தில் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா விழுப்புரத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Oct 2021 5:14 PM GMT (Updated: 26 Oct 2021 5:14 PM GMT)

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

விழுப்புரம், 

மாற்றுத்திறனாளிகளுக்கு  அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 5 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

இதையொட்டி, மாவட்ட பெருந்திட்ட வளாக நுழைவு வாயில் முன்பு மாற்றுத்திறனாளிகள், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒன்று திரண்டனர். 

 மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். போராட்டத்தில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன், மாவட்ட பொருளாளர் உமா, மாவட்ட துணை செயலாளர்கள் முருகன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


தர்ணா போராட்டம்

அதை தொடர்ந்து, மாவட்ட பெருந்திட்ட வளாக நுழைவு வாயிலில் இருந்து, கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். அங்கு கலெக்டரின் கார் நிறுத்தும் இடத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி அறிந்த, கலெக்டர் மோகன், நேரில் வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கோரிக்கைகளை கேட்டறிந்த அவர், ஒரு வாரத்துக்குள் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 


இதையேற்று மாற்றுத்திறனாளிகள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story