ஆன்லைன் நிறுவனத்தில் கொடுத்த ஆர்டரில் பெயிண்டுக்கு பதிலாக பார்சலில் வந்த உடைந்த கெடிகாரம்


ஆன்லைன் நிறுவனத்தில் கொடுத்த ஆர்டரில் பெயிண்டுக்கு பதிலாக பார்சலில் வந்த உடைந்த கெடிகாரம்
x
தினத்தந்தி 26 Oct 2021 5:21 PM GMT (Updated: 26 Oct 2021 5:21 PM GMT)

திண்டுக்கல் கல்லூரில் மாணவர் ஆன்லைன் நிறுவனத்தில் கொடுத்த ஆர்டரில் பெயிண்டுக்கு பதிலாக பார்சலில் உடைந்த கெடிகாரம் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்:
திண்டுக்கல்லை அடுத்த அண்ணாமலையார் மில்ஸ் காலனியில் வசித்து வருபவர் முருகன். கூலித்தொழிலாளி. இவருடைய மகன் சரவணக்குமார் (வயது 20). இவர் ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டவர். இதனால் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஆன்லைனில் பொருட்கள் விற்கும் ஒரு பிரபல நிறுவனத்தில் ஓவியம் வரைய பயன்படும் ஆயில் பேஸ்ட்லெஸ் பெயிண்டுக்கு ஆர்டர் செய்தார். 
இதையடுத்து சில நாட்கள் கழித்து ஆன்லைன் நிறுவனத்தின் ஊழியர், மாணவரின் வீட்டுக்கு வந்தார்.பின்னர் பெயிண்டுக்கு பதிலாக சுவர் கெடிகாரம் வந்து விட்டதாகவும், அதை திருப்பி அனுப்ப ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படியும் தெரிவித்தார். அதன்படி கெடிகாரத்தை திரும்ப பெற்றுக்கொள்ளும்படி ஆன்லைனில் சரவணக்குமார் விண்ணப்பித்தார். இதைத் தொடர்ந்து சில நாட்கள் கழித்து மற்றொரு ஊழியர் வந்து, ஒரு பார்சலை கொடுத்தார். மேலும் பெயிண்ட்டுக்கான தொகை ரூ.620 -ஐ பெற்று கொண்டு சென்றுவிட்டார்.உடனே பார்சலை பிரித்து பார்த்த சரவணக்குமார், உள்ளே உடைந்த சுவர் கெடிகாரம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் உடைந்த சுவர் கெடிகாரத்தை திரும்ப பெற்றுக்கொண்டு பெயிண்ட் வழங்கும்படி ஆன்லைன் நிறுவனத்தில் மீண்டும் விண்ணப்பித்தார். 
இதையடுத்து கெடிகாரத்தை திரும்ப வாங்க நேற்று 2 ஊழியர்கள் வீட்டுக்கு வந்தனர். பார்சலில் வந்த கெடிகாரத்தை அவர்களிடம், முருகன் கொடுத்தார். ஆனால் கெடிகாரம் உடைந்து இருப்பதாக கூறி திரும்ப வாங்காமல் சென்று விட்டனர். இதனால் மாணவரின் குடும்பத்தினர் ஏமாற்றமும், மனஉளைச்சலும் அடைந்து உள்ளனர்.

Next Story