வாலாஜா ஏரி நிரம்பியது


வாலாஜா ஏரி நிரம்பியது
x
தினத்தந்தி 26 Oct 2021 11:07 PM IST (Updated: 26 Oct 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் வாலாஜா ஏரி நிரம்பியது. மேலும் 14 ஏரி, குளங்கள் 75 சதவீதத்துக்கு மேல் நிரம்பி விட்டன

கடலூர், 

கடலூர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.  மாவட்டத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருவதால், நீர்வரத்து வாய்க்கால்களில் அதிகளவு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து ஏரி, குளங்களும் வேகமாக நிரம்பி வருகின்றன. குறிப்பாக சிதம்பரம் வட்டத்தில் மொத்தம் உள்ள 18 ஏரி, குளங்களில், ஒன்று முழுமையாக நிரம்பி வழிகிறது. மேலும் 14 ஏரி, குளங்களில் 76 முதல் 99 சதவீதம் வரை தண்ணீர் உள்ளது. 2 ஏரிகளில் 51 முதல் 75 சதவீதம் வரையும், ஒரு ஏரியில் 26 முதல் 50 சதவீதம் வரையும் தண்ணீர் உள்ளது.

வீராணம் ஏரி

இதுதவிர கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக வினாடிக்கு 104 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக வடவாறு வழியாக தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அதன்படி 47.50 அடி கொள்ளளவு கொண்ட வீராணம் ஏரியில் தற்போது 44.60 கனஅடி தண்ணீர் உள்ளது.
ஆனால் நீர்வரத்து இல்லை. விவசாய பாசனம் மற்றும் குடிநீருக்காக வினாடிக்கு 373 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மேலும் வி.என்.எஸ். மதகு வழியாக 162 கனஅடியும், சென்னை குடிநீருக்காக 62 கனஅடி தண்ணீரும் அனுப்பி வைக்கப்படுகிறது.

நிரம்பிய வாலாஜா ஏரி

இதேபோல் சேத்தியாத்தோப்பு அணைக்கட்டுக்கு வெள்ளாறு, ராஜன் வாய்க்கால் வழியாக தண்ணீர் தொடர்ந்து வருவதால், தற்போது 7.50 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணை 5 அடியை எட்டியுள்ளது. மேலும் 5.50 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரி, தற்போது நிரம்பி விட்டது. அதனால் ஏரிக்கு வினாடிக்கு வரும் 150 கனஅடி நீரும் அப்படியே வாய்க்கால்களில் வெளியேற்றப்படுகிறது.
6.50 அடி கொள்ளளவு கொண்ட பெருமாள் ஏரியிலும், தற்போது 5 அடிக்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதற்கு நீர்வரத்து வாய்க்கால் மூலம் ஏரிக்கு வரும் 20 கனஅடி தண்ணீரும், வாய்க்கால்கள் மூலம் வெளியேற்றப்படுகிறது. மேலும் தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Tags :
Next Story