வேலூரில் கழிவறையில் உணவு தயாரித்த ஓட்டலுக்கு சீல்
வேலூரில் கழிவறையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
வேலூர்
வேலூரில் கழிவறையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்த ஓட்டலுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஓட்டல்களில் சோதனை
வேலூர் மாநகரப் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தரமான உணவு தயாரிக்கப்படுகிறதா? என்பது குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி வருகின்றனர். தரமில்லாத உணவு விற்பனைக்கு வைத்திருக்கும் ஓட்டல்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். இந்தநிலையில் நேற்று காலை உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் அதிகாரிகள் ராஜேஷ், கந்தவேல் ஆகியோர் வேலூர் காந்திரோடு, பாபுராவ்தெரு உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒவ்வொரு ஓட்டலாக சென்று தரமான உணவு தயாரிக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். அதில் 2 ஓட்டல்களில் சுகாதாரம் இல்லாத உணவுகள் இருந்ததை கண்டுபிடித்தனர். அந்த ஓட்டல்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்தனர். மேலும் பாபு ராவ் தெருவில் உள்ள ஒரு வட மாநில உணவு வகைகள் தயாரிக்கும் ஓட்டலுக்கு சென்று சோதனை நடத்தினர்.
கழிவறையில் உணவு தயாரிப்பு
அந்த ஓட்டலில் உள்ள கழிவறையில் விற்பனைக்காக உணவு தயாரித்துக் கொண்டிருந்தனர். இதை கண்ட அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த உணவுகளை அழிக்குமாறு உத்தரவிட்டனர். மேலும் அந்த ஓட்டலை மூடி சீல் வைத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், கலெக்டர் குமாரவேல்பாண்டியன் உத்தரவின்பேரில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது சுகாதாரமற்ற முறையில் ஒரு ஓட்டலில் உணவு தயாரிக்கப்பட்டது. அதை மூடி சீல் வைத்துள்ளோம். ஓட்டல்களில் தரமான உணவு வகைகள் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உரிமையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றனர்.
Related Tags :
Next Story