பைனான்சியர் கொலையில் தம்பி உள்பட 3 பேர் கைது
நெல்லை அருகே பைனான்சியர் கொலையில் தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை:
நெல்லை அருகே, பைனான்சியர் கொலை வழக்கில் தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பைனான்சியர் கொலை
நெல்லை அருகே உள்ள தாழையூத்து தென்றல் நகரைச் சேர்ந்தவர் முருகன் என்ற முருகானந்தம் (வயது 48). இவர் பணம் கொடுக்கல், வாங்கல் தொழில் செய்து வந்தார்.
இந்தநிலையில் முருகானந்தம் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் இருந்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த தாழையூத்து துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து முருகானந்தம் மகள் அந்தோணி (23) தாழையூத்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
சொத்து பிரச்சினை
இந்தநிலையில் நேற்று காலை இந்த கொலை தொடர்பாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் கீழ மாடவீதியை சேர்ந்த மணிகண்டன் (25) என்பவர் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் முத்துகுமரன் முன்னிலையில் சரணடைந்தார். உடனே மணிகண்டனை, தாழையூத்து போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து முருகானந்தம் கொலை தொடர்பாக முருகானந்தத்தின் தம்பி அதே பகுதியை சேர்ந்த பைனான்சியர் கிருஷ்ணன் என்ற கிருஷ்ணபெருமாள் (40), தாழையூத்து செல்வி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சுந்தர் என்ற சுப்பிரமணியம் (31) ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கொலை செய்யப்பட்ட முருகானந்தத்துக்கும், அவருடைய தம்பி கிருஷ்ணனுக்கும் இடையே பல மாதங்களாக சொத்து பிரச்சினை இருந்ததும், இதில் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.
தம்பி உள்பட 3 பேர் கைது
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முருகானந்தம் மற்றும் அவருடைய மகள் அந்தோணி (23) ஆகியோர் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது திடீரென வீட்டிற்குள் கிருஷ்ணன், மணிகண்டன், சுந்தர் என்ற சுப்பிரமணியன் ஆகிய 3 பேரும் புகுந்தனர்.
அங்கு கட்டிலில் படுத்து கிடந்த முருகானந்தத்தை அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தோணி தடுக்க முயன்றபோது 3 பேரும் அந்தோணிக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்ற பரபரப்பு தகவல்கள் வெளியானது.
இதனை தொடர்ந்து கிருஷ்ணன் உள்ளிட்ட 3 பேரையும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மநாப பிள்ளை கைது செய்தார்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடைபெற்றது.
Related Tags :
Next Story